Published : 04 Jun 2020 06:58 am

Updated : 04 Jun 2020 06:59 am

 

Published : 04 Jun 2020 06:58 AM
Last Updated : 04 Jun 2020 06:59 AM

குடியிருப்புகளுக்கு சீல் வைத்து மக்களை அச்சப்படுத்தக் கூடாது; கரோனா அறிகுறி இருப்பவர்கள், கர்ப்பிணிகள், முதியோருக்கு பரிசோதனையை கட்டாயமாக்கலாம்- சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் கருத்து

corona-tests

சென்னை

கரோனா அறிகுறி உள்ளவர்கள், கர்ப்பிணிகள், முதியோருக்கு பரிசோதனையை கட்டாயமாக்க வேண்டுமே தவிர, குடியிருப்புகளுக்கு சீல் வைத்து பொதுமக்களை அச்சப்படுத்தக் கூடாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று 25 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில், சென்னையில் மட்டும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகள் நிரம்பிவிட்டதால், கல்லூரிகள், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதுவும் தற்போது நிரம்பிவிட்டதால், வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுபவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். திட்டமிடப்படாத தடுப்பு நடவடிக்கை, பரிசோதனைகளே இந்த நிலைக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் திட்டமிட்டுப் பணியாற்றி இருந்தால், கரோனா வைரஸ் பரவலை எளிதாகக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த2 லட்சம் பேரைக் கண்டறிந்து முறையாகபரிசோதனை செய்திருக்க வேண்டும். இதேபோல், கோயம்பேடு மார்க்கெட்டில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவுடன் உடனடியாக மார்க்கெட்டை மூடி பரிசோதனையை அதிகரித்திருக்க வேண்டும். இதைச் செய்திருந்தால், இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவதற்குள் வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்திருக்கும்.

ஆனால், தொற்று நோய் தடுப்பில் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகள் ஏற்கப்படவில்லை. பலரின் தலையீடுகளும் அதிகமாக இருந்தன. இதுவே, சென்னையில் வைரஸ் தொற்று அதிகரிக்கமுக்கிய காரணம். இப்போதும் நிலைமை கைமீறி போகவில்லை.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில்தான் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஒருவர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால், அவரது குடும்பத்தை மட்டும் தனிமைப்படுத்தி தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஒட்டுமொத்தமாக அடுக்குமாடி குடியிருப்பை தனிமைப்படுத்தி சீல் வைக்கக் கூடாது. இதனால்தான் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.

தற்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்துகின்றனர். இதுதவறு. இதனால் வீட்டில் உள்ளவர்களும்,அருகில் வசிப்பவர்களும் அச்சமடைகின்றனர். வீட்டில் தனி அறையுடன் கூடிய கழிப்பறை வசதி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்த வேண்டும். அப்படி வசதிகள் இல்லாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்புகளை ஏற் படுத்த வேண்டும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூறும் ஆலோசனைகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் வைரஸ் தொற்றின் பாதிப்பு, பரவல் மாறுபடுகிறது. அதனால், நம்முடைய மாநிலத்துக்கு என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகள் தேவையோ, அதை மட்டும் எடுத்தால் போதுமானது. முக்கியமாக, அனைவருக்கும் பரிசோதனை தேவையில்லை.

எனவே, முதியோர், அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், பிரசவத்துக்காக காத்திருக்கும் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனைசெய்யலாம். இதன்மூலம் தாய்-சேய்இருவரையும் பாதுகாக்க முடியும். இதேபோல், புற்றுநோய், இதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சினைகளுடன் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்களை, வார்டில் அனுமதிப்பதற்கு முன்பு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இதன்மூலம் மற்ற நோயாளிகளுக்கு வைரஸ் பரவுவதை தடுக்க முடியும்.

அதேபோல், குடும்பத்திலோ, அலுவலகத்திலோ ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டால், அனைவருக்கும் பரிசோதனை செய்ய தேவையில்லை. அறிகுறி யாருக்கு இருக்கிறதோ, அவருக்கு மட்டும் பரிசோதனை செய்ய வேண்டும்.

கரோனா வைரஸுக்கு என்று தனியாக மாத்திரை, மருந்துகள் இல்லை. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருந்துகள், சித்தா மருந்துகள் கொண்டு கூட்டுமருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையால் 5 நாட்களில் குணமடைந்து விடுகின்றனர். அதனால், சித்தா டாக்டர்களின் ஆலோசனையின்படி நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீரை பொதுமக்கள் குடிக்கலாம்.

கை கழுவும் வசதி

கரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்றால் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதலை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அலுவலகங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட மக்கள் வந்து செல்லும் இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும். அதேபோல் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். இவற்றைப் பின்பற்றினாலே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திவிடலாம்

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

3 லட்சம் பேர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்

சென்னையில் 200-க்கும் மேற்பட்ட தெருக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் இங்கு வசிக்கும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மனநல மருத்துவர்களிடம் கேட்டபோது, “குடியிருப்பு பகுதிகளை தனிமைப்படுத்தும்போது அங்கு வசிப்பவர்களுக்கு கண்டிப்பாக மனதளவில் பாதிப்பு ஏற்படும். ஊரடங்கில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வைரஸ் பரவல் இருக்கத்தான் செய்யும். கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதனால், நோட்டீஸ் ஒட்டி தனிமைப்படுத்தாமல், பாதுகாப்புடன் இருக்குமாறு தேவையான ஆலோசனைகளை வழங்கினாலே போதுமானது. அதேபோல், குழந்தைகளை வீட்டுக்குள் விளையாடுவதற்கு தேவையான வசதிகளை பெற்றோர் ஏற்படுத்தித் தரவேண்டும்” என்றனர்.


குடியிருப்புகளுக்கு சீல்கரோனா அறிகுறிகர்ப்பிணிகள்முதியோருக்கு பரிசோதனைசுகாதாரத் துறை அதிகாரிகள்மருத்துவ நிபுணர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author