Published : 03 Jun 2020 08:52 PM
Last Updated : 03 Jun 2020 08:52 PM

மின் கட்டண இறுதி தேதி நீட்டிப்பு இல்லை: மின் வாரியம் அறிவிப்பு

மின் கட்டணம் கட்ட இறுதித் தேதி உள்ளவர்கள் அந்தத் தேதிக்குள் கட்டிவிட வேண்டும். இனி கட்டண நீட்டிப்பு இல்லை என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த மின் வாரிய அறிவிப்பு வருமாறு:

“தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்தை உள்ளடக்கிய தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நிலவிவரும் கரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மின் நுகர்வோர் மற்றும் ஊழியரின் பாதுகாப்பு காரணம் கருதி, மின் கணக்கெடுப்பு எடுக்க முடியாத நிலை.

இதனால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படாமல் முந்தைய மாதம் மின்நுகர்வோர் செலுத்திய தொகையை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு வசூல் செய்யப்படும் தொகை அடுத்து வரும் மாத கணக்கெடுப்புத் தொகையில் சரிசெய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் ஊரடங்கு கால கட்டத்தில் வீட்டு மின்நுகர்வு அதிகரித்துள்ளதால் மின் கணக்கெடுப்பு நடத்தும் பொழுது அதிக கட்டணம் வரும் நிலையில் மின்வாரியம் முந்தைய மாத கட்டணத்தை மட்டுமே கழித்து யூனிட்டை கழிப்பதில்லை என்று ஊடகங்களில் வரும் செய்தி தவறானதாகும்.

கோவிட்-19 பரவுதலால் 24.03.2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு ஊரடங்கினை மேலும் 30.06.2020 வரை சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, 25.03.2020 முதல் 05.07.2020 வரை மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்ட தாழ்வழுத்த (LT/LTCT) நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின்கட்டணத்தை 06.07.2020 வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த (LT/LTCT) நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி தேதி 25.03.2020 முதல் 14.06.2020 வரை இருப்பின் அவர்கள் 15.06.2020 வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த (LT/LTCT) நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி 15.06.2020 அன்று மற்றும் அதற்கு பிறகோ இருப்பின் அவர்கள் தங்களுக்குரிய கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும். அவர்களுக்கு மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படமாட்டாது.

தமிழகத்தில் உள்ள அனைத்து உயரழுத்த நுகர்வோர்களை பொருத்தவரை (HT) தமிழ்நாடு மின்சார வாரியம் தனது மின் துண்டிப்பிற்கான உரிமையை விட்டு கொடுத்ததினால் பிப்ரவரி 2020, மார்ச் 2020, ஏப்ரல் 2020 மாதத்திற்கான மின்கட்டணத்தை முறையே 03/2020, 4/2020 மற்றும் 5/2020-ல் செலுத்தாமல் இருப்பின் அந்த உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் தங்களது கட்டணத்தை 15.06.2020-க்குள் செலுத்தலாம்.

அவர்களுக்கு மின் துண்டிப்பு மற்றும் மறு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மே 2020 மாத உயர் மின்னழுத்த மின் கட்டணத்தை நுகர்வோர்கள் அந்த மாதத்திற்கான குறிப்பிட்ட கெடு தேதிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x