

மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் சிறு, குறு தொழிற்சாலைகளைக் காப்பாற்றுவதற்கு முன்வர வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, திருமாவளவன் இன்று (ஜூன் 3) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியாவின் பொருளாதாரத்துக்கு ஆணிவேராக இருப்பதும் சுமார் 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துக்கொண்டிருந்ததுமான சிறு, குறு தொழிற்சாலைகள் தற்போது கரோனா ஊரடங்கால் முற்றிலும் சீர்குலைந்து மீண்டும் தலையெடுக்க முடியாத நிலையில் உள்ளன. சுமார் 30 விழுக்காடு சிறு, குறு தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் நிலையில் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிறு, குறு தொழிற்சாலைகளைக் காப்பாற்றுவதற்கு நேரடியாக நிதி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% சிறு, குறு தொழிற்சாலைகள் மூலமாக வருகிறது. அதுமட்டுமின்றி, ஏற்றுமதியில் 50% இவற்றின் மூலமே நடக்கிறது. மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பையும் இந்த தொழிற்சாலைகள் தான் அளித்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலான ஊரடங்கின் காரணமாகவும், தொடர்ந்து நீடித்து வரும் பொருளாதார மந்த நிலை காரணமாகவும் இந்த தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் திட்டத்தின்கீழ் வங்கிகளில் கூடுதலாகக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், எந்த வங்கியும் சொத்து ஜாமீன் இல்லாமல் கூடுதல் கடன் வழங்க முன்வரவில்லை. 20 சதவீத கூடுதல் கடன்களை வழங்கும் போதும் கூட வழக்கம்போல ஆவணங்களில் கையொப்பம் பெறுவது, அதற்கென கட்டணங்களை வசூலிப்பது என்ற நடைமுறையை வங்கிகள் பின்பற்றுகின்றன.
அதுமட்டுமின்றி, ஏற்கெனவே அரசாங்கத்துக்கு இருக்கும் வரி பாக்கி, தொழிலாளர்களுக்கான சம்பள பாக்கிகள் போன்ற விவரங்களைக் கேட்டு அந்த கடன் தொகையை நேரடியாக அவற்றுக்கு வங்கிகள் செலுத்துகின்றன. மீதமுள்ள தொகைதான் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் தரப்படுகிறது. இதனால், சிறு-குறு தொழிற்சாலைகள் இந்த கூடுதல் கடனைத் தமது தொழிலுக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றைக் காப்பாற்ற வேண்டுமென்றால் நேரடியாக இவற்றுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சம் சிறு, குறு தொழிற்சாலைகள் பதிவு செய்துள்ளன. இவற்றில் ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி பேர் வரை வேலை செய்து வந்தார்கள். இப்போது இந்த தொழிற்சாலைகள் எல்லாமே மூடப்பட்டுள்ளன. இவற்றை மீண்டும் நடத்துவதற்கு தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்காது போனால் வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். அது மேலும் பொருளாதார சிக்கல்களை உருவாக்கும். எனவே, மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் சிறு, குறு தொழிற்சாலைகளைக் காப்பாற்றுவதற்கு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்"
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.