அஞ்சாத சகாயத்தின் துணிச்சல் பாராட்டுக்குரியது: ஸ்டாலின்

அஞ்சாத சகாயத்தின் துணிச்சல் பாராட்டுக்குரியது: ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி நடக்க வேண்டிய கிரானைட் முறைகேடு விசாரணையையும், நரபலி புகார் மீதான விசாரணையையும் தடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சித்திருப்பது கண்டனத்திற்குரியது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "சட்டவிரோதமான கிரானைட் கொள்ளை மாநிலத்தின் சுற்றுப்புறச் சூழலை மட்டுமின்றி, கோடிக்கணக்கான ரூபாய் அரசின் கஜனாவிற்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க 2014-ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சிறப்பு ஆணையராக நியமித்தது.

அவரது விசாரணையில் இந்த கிரானைட் கொள்ளையால் அரசுக்கு 16,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த விசாரணையின் ஒரு பகுதியாக கிரானைட் குவாரி நடத்துபவர்களால் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சடலங்கள் புதைக்கப்பட்டதாக அடையாளம் காட்டப்பட்ட இடங்களில் தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபடுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு சகாயம் உத்தரவிட்டார்.

ஆனால் அவர் போட்ட உத்தரவை மதிக்க மறுத்து, தோண்டியெடுக்கும் பணியை தாமதம் செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி நடக்க வேண்டிய விசாரணையையும், நரபலி விசாரணையையும் தடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சித்திருப்பது கண்டனத்திற்குரியது.

மனித உயிர்கள் பலியாகியிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த பிறகும் சில கிரானைட் அதிபர்களைக் காப்பாற்ற மாநில அரசு முயற்சி செய்கிறது.

இப்படி ஒத்துழையாமை இயக்கம் நடத்திக் கொண்டிருக்கும் அதிமுக அரசுக்கு அஞ்சாமல் துணிச்சலுடனும், தீர்மானமாகவும் தன் விசாரணையை மேற்கொண்டிருக்கும் சகாயத்தை நான் பாராட்டுகிறேன்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயம் கிடைக்க வழி செய்வதுதான் அரசின் கடமையே தவிர, அதிகாரமிக்க ஒரு சிலரைக் காப்பாற்றுவதற்கு இல்லை என்பதையும் அதிகாரத்தை மாற்றி அமைப்பது பொதுமக்களின் கைகளிலே தான் உள்ளது என்பதையும் அதிமுக அரசு நினைவில் வைத்து செயல்பட வேண்டும் என்று இந்த நேரத்தில் வலியுறுத்த விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in