

மதுரையில் உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் செயலர் பதவி கடந்த 8 மாதங்களாக காலியாக இருப்பதால், லே-அவுட் அனுமதி பெறுவது தாமதமாகி வருகிறது.
மதுரை மாவட்டத்தில் குடியிருப்புகள் விரிவாக்கம் அதிகரித்து வருகிறது. புதிய லே-அவுட்களுக்கு மாவட்ட உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு லே-அவுட் அனுமதி கேட்டு அளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மனுக்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படாமல் உள்ளது.
இதற்கு மதுரை மாவட்ட உள்ளூர் திட்டக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் பதவி கடந்த 8 மாதமாக காலியாக இருப்தே காரணம் என ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தற்போது மதுரை உள்ளூர் திட்டக்குழுமத்தின் பொறுப்பு உறுப்பினர் செயலராக மதுரை மண்டல நகர் ஊரமைப்புத் துறையின் துணை இயக்குனர் செயல்பட்டு வருகிறார். இவருக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் உள்ளூர் திட்டக்குழுமத்தில் கோப்புகள் தேங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ரியல் எஸ்டேட் தொழிலில் செய்பவர்கள் கூறுகையில், லே-அவுட் அனுமதி கேட்டு தினமும் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் உள்ளூர் திட்டக்குழுமத்திடம் வழங்கப்படுகிறது.
ஆனால் உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை. இப்போது பொறுப்பு உறுப்பினர் செயலர் தான் பணியில் உள்ளார். அவருக்கு வேறு பணிகள் இருப்பதால் கோப்புகள் மீது முடிவெடுப்பது தாமதமாகி வருகிறது.
இதனால் மதுரை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே மதுரை உள்ளூர் திட்டக்குழுமத்திற்கு நிரந்தர உறுப்பினர் செயலரை நியமிக்கவும், லே-அவுட் அனுமதி கோரும் மனுக்கள் மீது உடனுக்குடன் முடிவுகள் எடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.