

கேரளாவில் தென்மெற்கு பருவமழை தொடங்கி பெய்து வருவதால் அண்டைய மாவட்டமான கன்னியாகுமரியிலும் பரவலாக மழை பெய்கிறது.
குறிப்பாக குமரி மாவட்டத்தில் மலையோரங்கள், அணைப்பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. ஒன்றரை மாதத்திற்கு மேல் மழை பெய்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களாக மழையின் வேகம் தீவிரமடைந்துள்ளது.
கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் மேற்குத் தொடர்ச்சி மலை, மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்கிறது.
அதிகபட்சமாக சிற்றாறில் 80 மிமீ., மழை பதிவானது. பேச்சிப்பாறை 51, பெருஞ்சாணி 64, புத்தன்அணை 63, சிற்றாறு இரண்டு 52, சுருளோடு 41, தக்கலை 23, குளச்சல் 24, இரணியல் 18, பாலமோர் 32, மாம்பழத்துறையாறு 20, கோழிப்போர்விளை 28, அடையாமடை 22, முள்ளங்கினாவிளை 60, முக்கடல் அணையில் 13 மிமீ., மழை பெய்திருந்தது.
கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 2203 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 37.10 அடியாக உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி அணைக்கு 1289 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. நீர்மட்டம் 43.85 அடியாக உயர்ந்துள்ளது. இதைப்போல் சிற்றாறு அணைகளுக்கும் 500 கனஅடிக்கு மேல் தண்ணீர் உள்வரத்தாக வருகிறது.
சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 13.19 அடியாகவும், சிற்றாறு இரண்டின் நீர்மட்டம் 13.28 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் அளவில் இருந்து 1.9 அடியாக உயர்ந்துள்ளது.
குமரி அணைப்பகுதிகள், மற்றும் மலையோரங்களில் பெய்து வரும் கனமழையால் குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் எப்போதும் மிதமான தண்ணீருடன் அழகாக காட்சியளிக்கும் திற்பரப்பு அருவி, தற்போது அபாயகரமான பகுதியாக தென்படுகிறது. எனவே திற்பரப்பு அருவி பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குமரியில் இன்று காலையில் வீசிய சூறைக்காற்றில் பல இடங்களில் மரங்கள் முழிந்து விழுந்தன. நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு அருகே நின்ற பழமையான நாவல் மரம் முறிந்து மின்கம்பத்தில் விழுந்தது. அந்நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.