

கரோனா ஊரடங்கால் பணமின்றி தவித்த பெற்றோர் இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் நிதி திரட்டி உதவிகள் வழங்கி திருமணம் புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி திப்புராயப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி (34), மாற்றுத்திறனாளி. பெற்றோரை இழந்த அவர், அப்பகுதியிலுள்ள தனியார் இல்ல அமைப்பின் உதவியால் படித்து டெய்லரிங் கற்று உழைத்து வாழ்ந்து வந்தார். இவருக்கும் ஈரோடு பவானிகுமாரபாளையத்தைச் சேர்ந்த கேப்டன் (36) என்பவருக்கும் திப்புராயப்பேட்டை கருமாரியம்மன் கோயிலில் ஜூன் 1-ல் திருமணம் நடத்த ஏற்பாடுகளை அவர்களின் உறவினர்கள் செய்து வந்தனர்.
கரோனா ஊரடங்கால் திருமணத்துக்கு பொருட்கள் வாங்க பணமில்லாமல், மணப்பெண் லட்சுமி சிரமப்பட்டார்.
இதையடுத்து, இவர்களின் நிலையறிந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தாஸ் என்பவர், வாட்ஸ் அப்பில் 'திருமண மொய்' என்ற குழுவை உருவாக்கினார். அதில் மாற்றுத்திறனாளி லட்சுமி நிலை பற்றி பதிவிட்டார். குழுவில் உள்ளோரை தலா ரூ.200 மட்டும் லட்சுமி வங்கி கணக்கில் செலுத்த அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து பலரும் உதவி திருமணம் நடைபெற்றது.
வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி உதவியோர் கூறுகையில், "உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் போலவே லட்சுமிக்கு உதவினோம். திருமணத்துக்குத் தேவையான புடவை, சீர்வரிசை பொருட்கள் ஆகியவை அனைவரின் உதவியால் வாங்கப்பட்டன. நேரு வீதியிலுள்ள நகைக்கடையில் மாங்கல்யம் வாங்க சென்றோம். லட்சுமி நிலையை அறிந்த நகை கடை உரிமையாளர் பணம் பெறாமல் திருமண மொய்யாக மாங்கல்யத்தைத் தந்தார். பலரது உதவியால் லட்சுமி வங்கி கணக்கில் பணம் சேர்ந்தது. வாட்ஸ் அப் குழு மூலம் சேர்ந்த புடவை, மாங்கல்யம், சீர்வரிசை பொருட்களையும் தந்தோம். திருமணமும் சிறப்பாக நடைபெற்றது" என்றனர்.
மணமகன் கேப்டன் கூறுகையில், "எனது சித்தி ஆரோவில்லில் டெய்லரிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கு லட்சுமி வேலையில் இருந்தார். அவரது நிலை தொடர்பாக சித்தி கூறியதை கேட்டு பேச தொடங்கினோம். அது காதலாக மாறியது. நான்கு ஆண்டுகளாக காதலித்தோம்.
எங்கள் வீட்டில் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. நான் திருமணத்தில் உறுதியாக இருந்தேன். ஆறு மாதம் முன்பு நிச்சயம் நடைபெற்றது. திடீரென்று கரோனா வந்ததால் மூன்று மாதங்களாக வேலையில்லை. கையில் போதிய பொருளாதாரமும் இல்லை. ஆனால், புதுச்சேரியில் எங்கள் நிலையறிந்து பலரும் உதவியதை மறக்கவே முடியாது.
நான் ஈரோட்டில் துணி டிசைன் பிரிண்டிங் பணியில் மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் இருக்கிறேன். மறுபடியும் வேலை தொடங்குவதால் ஊருக்கு செல்கிறேன். வீடு பார்த்துள்ளேன். பெற்றோர் இல்லாத லட்சுமியை நன்றாக பார்த்துக்கொள்வேன்" என்று தெரிவித்தார்.
திருமண பெண் லட்சுமி கூறுகையில், "பெற்றோர் சிறு வயதில் இறந்ததால் இங்குள்ள இல்லத்தில்தான் வளர்ந்தேன். நான் டெய்லரிங் நன்றாக செய்வேன். சுடிதார் உள்ளிட்ட துணிகளை தைப்பதன் மூலம் நிச்சயம் நல்ல வருமானம் வரும். நான் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் பவர் மிஷின் வாங்க திட்டமிட்டுள்ளோம். அதை ஈரோடு சென்று வாங்கி துணிகள் தைப்பேன். நாங்கள் இருவரும் உழைத்து வாழ முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.
முக்கியமாக, எனது திருமணதுக்கு உதவிய புதுச்சேரி சகோதரர்களையும், சகோதரிகளையும் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன். ஈரோடு சென்றவுடன் எனது மாமனார், மாமியாரை சமாதானம் செய்து அவர்களுடன் கூட்டு குடும்பமாக வசிக்கவே விருப்பம்" என்கிறார், புன்னகையுடன்.