Published : 03 Jun 2020 03:18 PM
Last Updated : 03 Jun 2020 03:18 PM

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் தமிழகத்தில் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம் ,மருத்துவ வசதி கிடைப்பதை உறுதிசெய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக, மஹாராஷ்டிரா மாநிலம், சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் சிக்கியுள்ள கணேசன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா ஆகியோர் வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய – மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனவா என்பதை அறிந்து கொள்ள, இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும், தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டதுடன், அவர்களின் நிலையை ஊடகங்களில் பார்க்கும் எவராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என வேதனை தெரிவித்துந்தனர்.

மேலும், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, அனுப்பபட்டவர்கள் மற்றும் அனுப்பப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை, மத்திய மற்றும் பிற மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு, சொந்த ஊர் திரும்பும் வழியில் எத்தனை தொழிலாளர்கள் பலி உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய மாநில அரசுகள் தரப்பில் அறிக்கை அளிக்க அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, மனுதாரர் தரப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய உணவு வழங்கப்படவில்லை என்றும், அடிப்படை வசதிகள் இல்லாமல் ரயில் நிலையங்களில் தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதை கேட்ட நீதிபதிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம், மருத்துவ வசதி ஆகியவை கிடைப்பதை உறுதி செய்யும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x