Published : 03 Jun 2020 03:09 PM
Last Updated : 03 Jun 2020 03:09 PM

ஓசூர் மலைக்கிராமத்தில் வண்டுகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: தோட்டக்கலை இணை இயக்குனர் செயல் விளக்கம்

ஓசூர்

தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெட்டமுகிலாளம் மலைக்கிராமத்தில் பயிரிட்டுள்ள பீன்ஸ் தோட்டத்தில் வண்டுகளின் (மே வண்டு) தாக்கம் இருப்பதாகவும், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்டத் தோட்டக்கலை இணை இயக்குனர் மோகன்ராம், பெட்டமுகிலாளம் கிராமத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது “மே வண்டுகள்” எனப்படும் வண்டுகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை விவசாயிகளுக்குச் செயல் விளக்கத்துடன் செய்து காட்டினார்.

பின்பு விவசாயிகளிடம் அவர் கூறியதாவது:
''ஒரு வண்டானது 70 முதல் 100 வரையிலான முட்டைகளை இடும். இதன் இளம் பருவத்துப் புழுவானது மண்ணில் வாழும் தன்மையுடையது. இப்புழுவானது மே மற்றும் ஜுன் மாதங்களில், இலைகளை உணவாக உட்கொள்ளும் தன்மையை கொண்டது. இதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் எளிதான செயலாகும். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிமுறைகளைச் செயல்படுத்தி மிகவும் எளிதாக இந்த வண்டுகளை முற்றிலுமாக அழித்து விடலாம்.

கோடை உழவு முறை
கோடை உழவு மேற்கொள்வதன் மூலம் இந்த வண்டுகளின் இளம் பருவத்துப் புழு, கூட்டுப்புழு போன்றவை பறவைகளினால் உணவாக உட்கொள்ளப்பட்டு அழிந்து விடும்.

விளக்குப் பொறி அமைத்தல் முறை
ஒரு ஏக்கருக்கு 4 விளக்குப் பொறிகள் என்ற அளவில் பயன்படுத்தி இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

ஆமணக்கு புண்ணாக்கு கரைசல் முறை
ஆமணக்கு புண்ணாக்கு ஒரு கிலோவை 4 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு பானையில் நிலத்தில் வைப்பதின் மூலம் இவ்வண்டுகள் கவரப்பட்டு அழிக்கப்படுகின்றன.

பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்திக்கட்டுப்படுத்தும் முறை
கார்டாப் ஹைட்ரோ குளோரைடு - 2கிராம்/லி. அல்லது லாம்டா சைக்ளோத்ரின் - 2மிலி/லி. அல்லது அசிபேட் - 2கிராம்/லி. அல்லது இமிடாகுளோபிரிட் - 1மிலி/லி என்ற அளவில் பின்மாலை நேரங்களில் தெளித்து இந்த வண்டுகளை முற்றிலுமாக அழித்துவிடலாம்.

மேலும் விவசாயிகள் இந்த வண்டுகளின் தாக்கம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம். இதுகுறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள அந்தந்தப் பகுதி தோட்டக்கலைத் துறை அதிகாரிகளை அணுகிப் பயன்பெற வேண்டும்''.

இவ்வாறு விவசாயிகளிடம் மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் மோகன்ராம் கூறினார்.

இந்த ஆய்வு மற்றும் செயல் விளக்கத்தின் போது கெலமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிதா, தளி தோட்டக்கலை அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x