Last Updated : 03 Jun, 2020 02:54 PM

 

Published : 03 Jun 2020 02:54 PM
Last Updated : 03 Jun 2020 02:54 PM

விருதுநகர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- முறம்பு அருகே அமைந்துள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் போ. கந்தசாமி கூறியபோது, "மாங்குடிக்கு அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் ஆவுடையாபுரம் பகுதியில் கருப்பையா என்பவரின் புன்செய்நிலத்தை உழவுப் பணியின் போது 6 அடி உயரமுள்ள கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சிற்பத்தின் நான்கு கைகளும் உடைந்த நிலையில் காணப்படுகிறது. அப்பகுதியில் இச்சிற்பத்தின் ஆசனக் கல்லும் அந்நிலத்திலேயே கண்டெடுக்கப்பட்டது.

தென்தமிழகத்திலேயே முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொற்றவை சிற்பம் மிக நேர்த்தியாக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் வட இந்தியாவில் கொற்றவைக்கு சிங்க வாகனமாக அல்லது புலி வாகனமாக சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் கலைமான் கொற்றவையின் வாகனமாக காட்டப்படுவது மிகவும் அரிதாக உள்ளது. வட தமிழகத்தில் எடுக்கப்பட்ட மான் வாகனத்தைத் கொண்ட கொற்றவை சிற்பம் ஒன்று சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக சிற்பக் கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தென்தமிழகத்தில் கொற்றவையின் வாகனமாக கலைமான் காட்டப்பட்டுள்ள சிற்பம் முதன்முதலாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சங்க காலத்திலிருந்தே கொற்றவை வழிபாடு மிகச் சிறந்த வழிபாடாகும். சங்க இலக்கியங்களில் கொற்றவை பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.

கொற்றவை வழிபாடு குறித்து சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரிகள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலை நிலத்தில் வாழ்ந்த ஆறலைக் கள்வராகிய எயினர் வணங்கும் கடவுளாக கொற்றவை விளங்குகின்றது. ஆநிரை கவர்தல் போரில் எயினர்க்கு வெற்றிதரும் வழிபாடாகவும் கொற்றவை வழிபாடு அமைந்திருந்தது.

நெடுநெல்வாடையில் போருக்குச் செல்லும் வீரன் வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்று வெற்றி தெய்வமாக வழங்கியதாகவும் நச்சினார்க்கினியர் உரையில் விளக்கமளித்துள்ளார்.

பாலை நில மக்களின் பிரதான கடவுளாகவும், போர் தெய்வமாகவும் கொற்றவை வழிபாடு இருந்துள்ளது. கொற்றவை வழிபாடு வேட்டைத் தெய்வ வழிபாடாகவும், சங்ககாலத்திலிருந்து தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.

காட்டு விலங்குகளையும், வேட்டுவர்களையும் காக்கும் தெய்வமாகவும் கொற்றவை கருதப்படுகிறாள். தற்போது கொற்றவை வழிபாடு பிடாரி, காளி, துர்க்கை போன்ற கடவுளின் வழிபாட்டோடு சேர்க்கப்பட்டுள்ளது.

ஆறு அடி உயரமுள்ள கொற்றவை புடைப்புசிற்பம் நேராக நின்றவாறு, நான்கு கைகள் உடைந்த நிலையில், அபய முத்திரையுடன் உள்ள ஒரு கை மட்டும் கயிற்றால் கட்டியுள்ளனர்.

அழகிய திருமுகத்துடன் அலங்கரிக்கப்பட்ட கரண்ட மகுடம் சூட்டிய நிலையில், நீண்ட இரு மகர குண்டலங்கள் உடனான காதணிகளும் அணிந்து உள்ளது போன்றும் மிக நேர்த்தியாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணிகள் அலங்காரத்துடன் காட்டப்பட்டு, மற்றுமொரு அணிகலன் ஒன்று வயிற்றுப் பகுதி வரை தொங்கிய நிலையில் சூலாயுதம் கட்டப்பட்டுள்ளது.

மார்புக் கச்சை அணிந்தவாறும், இடை மெலிந்தும், கீழாடை இடுப்பு அணிகலன்களோடு அலங்கரிக்கப்பட்டு துணி மடிப்புகளுடன் பாதம் வரை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

சிற்பம் நிறுத்தப்பட்டுள்ள ஆசனக்கல்லும் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. கொற்றவையின் வாகனமான கலைமான் சுருங்கிய கொம்புகளுடன் மிக அழகாக முகப் பகுதியும் பின்பகுதியும் செதுக்கப்பட்டிருக்கிறது. கொற்றவை சிற்பத்தின் உருவ அமைப்பைக் கொண்டு முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த அரிய வகை சிற்பமாக கருதப்படுகிறது.

இச்சிற்பத்தை மாங்குடியைச் சேர்ந்த மலைக்கனி, ஜீவா, பெருமாள்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, சுப்பிரமணியம் மற்றும் ராஜகுரு ஆகியோர் சிற்பத்தைச் சுத்தம் செய்து அங்கு உள்ள ஆலமரத்தின் கீழ் ஆசனக்கல் மேல் கொற்றவை சிற்பத்தை நிறுத்தி வைத்து வழிபாடும் செய்து வருகின்றனர்.

ஆவுடையாபுரம் பகுதியில் ஏற்கெனவே 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்தி சிற்பம், தமிழ் கல்வெட்டு, விநாயகர் சிற்பம், மற்றும் பல கல்தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பழமையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு கோயில் அழிந்திருக்கலாம் என்பதை கள ஆய்வின் மூலமாக இப்பகுதி வரலாற்றை உறுதிப்படுத்த முடியும்" என்று முனைவர் போ.கந்தசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x