

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர் நகராட்சியில் பணியாற்றும் துப்புறவு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 3) நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு நகராட்சியில் பணியாற்றும் 250 தூய்மை பணியாளர்களுக்கு பூத்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து, தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கியதோடு, சொந்த செலவில் அரிசி, பருப்பு, சமையல் பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "கரோனா காலத்தில் தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு. மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளபோது பிடிவாதமாக தேர்வை நடத்த வேண்டும் என்று அமைச்சர் நடந்துகொள்வது அதிர்ச்சியை அளிக்கிறது. எனவே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்.
மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அரசும், மாநில அரசுகளும் உடனடியாக அவர்களுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவே, மத்திய அரசு இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும்.
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் விரைந்து எடுக்க வேண்டும். சென்னையில் அதிக அளவில் கரோனா தொற்ற கண்டறியப்படுவதால் சென்னை மாநகரத்தை தனிமைப்படுத்தி அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.