Published : 03 Jun 2020 01:51 PM
Last Updated : 03 Jun 2020 01:51 PM

கரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும், தனியார் மருத்துவமனையில் 50% படுக்கை; ஜவாஹிருல்லா தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றம் தள்ளுபடி

கரோனா சிகிச்சைக்கு கட்டணத்தை நிர்ணயிக்க கோரியும், தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க கோரியும் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா சென்னை உயர் நீதிமன்றத்தி பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார், அதில் “தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டில்லி, குர்கான் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் 12 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கரோனாவுக்கு தனியாக சிகிச்சை இல்லை என்பதால், வழக்கமான வைரஸ் காய்ச்சல்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையே வழங்கப்படுகிறது.

அனைத்து தரப்பினருக்கும் சிகிச்சை வழங்க வேண்டிய கடமை தனியார் மருத்துவமனைகளுக்கு உள்ளது. பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினரிடம் அதிக கட்டணம் வசூலிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதையும் இங்கே சுட்டி காட்டுகிறோம்.

கரோனாவால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளால் மட்டும் நிலைமையை சரி செய்து விட முடியாது என்பதால் தனியார் மருத்துவமனைகளில் பங்களிப்பு அவசியமானது. வர்த்தக சுரண்டலை தடுக்க, கட்டண விகிதம் உள்ளிட்ட ஒழுங்குமுறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளை சிகிச்சை அளிக்க அனுமதித்த அரசு, கட்டணம் நிர்ணயிக்க தவறிவிட்டதால், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கிறது. சாதாரண மக்களால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியவில்லை. மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதால் காப்பீடு கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது.

எனவே தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்கும்படி மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்த உத்தரவிட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள், நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். குறிப்பாக கரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்”. என்று கோரிக்கை வைத்திருந்தார்.

ஜவாஹிருல்லா வின் இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்திலும் இதுபோன்ற வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை என்பதையும், குறிப்பிட்டு எந்த அரசாணையை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அப்போது மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்டது என்றும், தங்களது மனு மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.

இதையடுத்து நீதிபதிகள் அமர்வு, பொதுப்படையான குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்த முடியாது என்றும், சரியான தகவலை மனுதாரர் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியதுடன், அடிப்படை உரிமைகள் மீறல் குறித்து குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை என்பதால் வழக்கை ஏற்க முடியாது என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x