நெருப்பைச் சுவைத்தே நெஞ்சுரம் வளர்த்தாய்! நெருங்கும் பகையை நெடுகிலும் சாய்த்தாய்!: கருணாநிதிக்கு திருமாவளவன் அஞ்சலி
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவரை நினைவுகூர்த்துள்ளார்.
மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், பல தலைவர்களும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். கருணாநிதி குறித்து தங்கள் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவனும் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக, திருமாவளவன் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "ஜூன் - 3- கருணாநிதி பிறந்தநாள்: குவளையில் மலர்ந்து குவலயம் விரிந்தாய்! எழுதுகோல் எடுத்தே செங்கோல் பிடித்தாய்! நெருப்பைச் சுவைத்தே நெஞ்சுரம் வளர்த்தாய்! நெருங்கும் பகையை நெடுகிலும் சாய்த்தாய்! பக்குவம்தான் உனது படைக்கலன்! சமத்துவம்தான் உனது அடைக்கலம்!" என பதிவிட்டுள்ளார்.
