சென்னையில் இருசக்கர வாகனங்கள் மூலம் குறுகிய சாலைகளில் கிருமி நாசினி தெளிப்பு; முதல்வர் தொடங்கி வைத்தார்

இருசக்கர வாகனங்களை தொடங்கி வைக்கும் முதல்வர் பழனிசாமி
இருசக்கர வாகனங்களை தொடங்கி வைக்கும் முதல்வர் பழனிசாமி
Updated on
1 min read

சென்னை மாநகரில் குறுகிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் வகையிலான 25 இருசக்கர வாகனங்கள் மற்றும் தெளிப்பான்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 3) வெளியிட்ட செய்தி வெளியீடு:

"தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக சென்னை மாநகரில் கிருமி நாசினி தெளித்திட 25 இருசக்கர வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைக்கும் அடையாளமாக 9 இருசக்கர வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள் கரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தமிழகமெங்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகரில் மருத்துவமனைகள், மார்க்கெட் பகுதிகள், பேருந்து நிலையங்கள் என சுமார் 45 ஆயிரம் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்காக வான்நோக்கி உயரும் ஏணி ஊர்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சென்னை மாநகரில் உள்ள குறுகிய சாலைகளில் பெரிய வாகனங்கள் செல்ல இயலாத நிலை உள்ளதால், அச்சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து 1 கோடியே 36 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 25 இருசக்கர வாகனங்கள் மற்றும் தெளிப்பான்கள் வாங்கப்பட்டன.

இந்த இருசக்கர வாகனங்களில் காற்றழுத்த கிருமி நாசினி தெளிப்பான் பொருத்தப்பட்டுள்ளதால், ஒரு மணிநேரத்தில் 1,620 லிட்டர் கிருமி நாசினியை தெளிக்க இயலும். சென்னையில் கரோனா வைரஸ் பாதித்த கட்டுப்பாட்டு பகுதிகளில் இவ்வாகனங்கள் பயன்படுத்தப்படும். கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் முடிவுற்ற பிறகு, இவ்வாகனங்கள் சென்னையின் குறுகிய சாலைகளில் ஏற்படும் தீயினை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in