Published : 03 Jun 2020 11:53 AM
Last Updated : 03 Jun 2020 11:53 AM

கருணாநிதி பிறந்த நாள்: நினைவிடத்தில் தொண்டருக்கு திருமணம் நடத்தி வைத்த ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் 97 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின் திமுக தொண்டர் ஒருவரின் திருமணத்தையும் நடத்தி வைத்தார்.

பொதுவாக திருமணங்கள் சமய வழிபாட்டுத்தலங்கள், மண்டபங்கள், இல்லங்களில் நடக்கும். முதன் முறையாக எளிய முறையில் திருமணங்களை இடதுசாரிகளும், திராவிட இயக்கத்தினரும் நடத்த தொடங்கினர். திராவிட இயக்கங்கள் தாலி, புரோகிதர் இல்லாமல் மாலை மாற்றிக்கொள்ளும் திருமணங்களை அதிகம் ஊக்குவித்தனர். இது சுயமரியாதை திருமணம் என அழைக்கப்பட்டது.

இதற்கு அங்கீகாரம் இல்லாத நிலையில் திமுக ஆட்சியில் இதற்கு அரசு அங்கீகாரம் அளித்தது. இவ்வாறு நடைபெறும் திருமணங்களை பதிவு செய்யவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதனால் சுயமரியாதை திருமணங்கள் அதிகரித்தன. காலப்போக்கில் தலைவர்கள் தாலியும் எடுத்துக்கொடுக்கும் வழக்கம் கட்சித்தொண்டர்களால் கடைபிடிக்கப்பட்டது.

சிலர் மறைந்த தமது தலைவர்களின் சமாதியில் திருமணம் செய்வதன் மூலம் அவரது ஆசி கிடைப்பதாக சமாதியில் திருமணம் செய்து வருகின்றனர். இன்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் அவரது நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தியபோது தொண்டர் ஒருவரின் திருமணத்தை தாலி எடுத்துக்கொடுத்து நடத்தி வைத்து பரிசளித்து வாழ்த்தினார்.

இதுகுறித்து திமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

“இன்று (03-06-2020) திமுக தலைவர் ஸ்டாலின் கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலை, கோபாலபுரம் மற்றும் சிஐடிகாலனியில் உள்ள அவரது இல்லங்கள் மற்றும் முரசொலி அலுவலகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் அவரது புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணா அவர்களது நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது கலைஞர் நினைவிடத்தில் திமுக தொண்டர் அசோக் குமார் - மகாலட்சுமி இணையருக்கு திருமணம் நடத்தி வைத்து, மணமக்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x