

மருத்துவ பட்ட, பட்டய மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் தமிழக இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று (ஜூன் 3) வெளியிட்ட அறிக்கை:
"தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்புக்கு மருத்துவ பட்டம் மற்றும் பட்டயப் படிப்பில் எடுத்துக் கொள்ளப்பட்ட 15 சதவிகித இடங்களிலும் முதுநிலை பட்டப்படிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 50 சதவிகித இடங்களிலும் 'தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு (கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்பு மற்றும் பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்குதல்) சட்டம் 1993-ன்படி இடஒதுக்கீடுகளை பின்பற்றாமல் மத்திய அரசு இந்தச் சட்டத்தை மீறி உள்ளது.
எனவே, மத்திய தொகுப்பு இடங்களிலும் தமிழகத்தின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
மேற்கண்ட சட்டத்தின்படி மத்திய தொகுப்புக்கு எடுக்கப்பட்ட இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஐம்பது சதவிகிதம் இடஒதுக்கீட்டையும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவிகித இடஒதுக்கீட்டையும், பழங்குடியினருக்கு ஒரு சதவிகித இடஒதுக்கீட்டையும் அமல்படுத்த வேண்டும்.
மேலும், இதனை 2020-21 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையின் போதும் அதற்குப் பின்பும் இதைப் பின்பற்ற வேண்டும் என்றும் இந்த இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கு உரிய ஆணைகளை வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜூ 2) வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பி.வி.சுரேந்திரநாத் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வாதாடுகிறார்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.