

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது.
கரோனா தொற்று அச்சம் காரணமாக, ஊரடங்கு அமலில் இருப்பதால், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் தங்களின் இடங்களிலேயே தனிமனித இடைவெளியை கடைபிடித்து கருணாநிதிக்கு மரியாதை செலுத்த வேண்டும் எனவும், சென்னையில் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும்போது கட்சியினர் திரளக் கூடாது எனவும் ஏற்கெனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.
அதன்படி, இன்று (ஜூன் 3) சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், நினைவிடத்தில் திமுகவை சேர்ந்த ஒருவருக்குத் திருமணத்தையும் ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
முன்னதாக, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலும், அண்ணா அறிவாலயத்திலும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.