Published : 03 Jun 2020 10:34 AM
Last Updated : 03 Jun 2020 10:34 AM

அப்பா! உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது பெரும் பேறு; கனிமொழி நெகிழ்ச்சி பகிர்வு

கனிமொழி மற்றும் கருணாநிதி: கோப்புப்படம்

சென்னை

"அப்பா! உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது மறுபிறவியற்ற இந்த வாழ்க்கையின் பெரும் பேறு" என கருணாநிதி குறித்து கனிமொழி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகின்றது.

இதனை முன்னிட்டு, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி வெளியிட்ட மடல்:

"ஒரு நாள் தலைவரோடு அறிவாலயத்தில் அவரது அறையில் நின்றுகொண்டிருந்தேன். மாலை நேரம்; பல ஊர்களில் இருந்து திமுக தொண்டர்கள் தலைவரை சந்திக்கக் காத்திருந்தார்கள். துறைமுகம் காஜா, ஓவ்வொருவராக அறைக்குள் அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது 75 அல்லது 80 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் அறைக்குள் வந்தார். எண்பது வயதைத் தாண்டிய தலைவரை பார்த்து அவர் "எப்படி இருக்க? என்னை உனக்கு ஞாபகம் இருக்கா?" என்றபடி உள்ளே நுழைந்தார். அவரது தொனியில், "நீ கட்சி தலைவராயிட்ட; முதலமைச்சரா வேற ஆயிட்ட; உனக்கெப்படி என்னை எல்லாம் நினைவு இருக்கும்?" என்ற எள்ளல் ததும்பி வழிந்தது. சுற்றி நின்றவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி. பெரியவர் அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ எச்சரிக்கை பற்றிக்கொண்டது. ஒரு இறுக்கம்.

தலைவர் முகத்திலோ ஒரு மந்தகாசப் புன்னகை பூத்தது. கருப்புக் கண்ணாடிக்குள்ளும் கண்களில் படர்ந்த குறும்பு தெரிந்தது. "ஏன் ஞாபகம் இல்ல" என்று அவர் பெயர் சொல்லி அழைத்தார். "பார்த்துப் பல வருடம் ஆயிடுச்சு" என்றார். அதுவே எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவர் அடிக்கடித் தலைவரை வந்து சந்திக்கக் கூடியவர் இல்லை. அடுத்து, தலைவர் கேட்டார். "நான் போன வாரம் கூடஉங்க ஊருக்கு பொதுக்கூட்டத்துக்கு வந்தேனே; உன்ன கூட்டத்தில் தேடிப் பார்த்தேன். நீ வரலயே." அதற்குள் அந்த பெரியவர் கொஞ்சம் நெளிந்தார். "இல்ல, என் மகளோட கணவர் வீட்ல ஒரு உறவுக்காரர் இறந்துட்டார். அங்க போகும்படி ஆயிடுச்சு. நீ வந்தப்ப இல்லயேன்னு தான் பாக்க வந்தேன்."

ஒரு பேரியக்கத்தின் தலைவருக்கும் அதன் அடிப்படைத் தொண்டனுக்குமான உரையாடல் இது. அறையில் இருந்த நானும் மற்றவர்களும் நெகிழ்ச்சியோடு அதை பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் 'உடன்பிறப்பே' என்று அழைப்பதும் கூட்டம் அலைகடல் என ஆர்ப்பரிப்பதும் மனதில் பேரிசையாக வியாபித்தது.

அப்பா! உங்களைப்போல் ஒரு தலைவனாகவும் தந்தையாகவும் பெற்றது மறுபிறவியற்ற இந்த வாழ்க்கையின் பெரும் பேறு"

இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x