

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
வெப்பச் சலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் 90 மி.மீ. மழை பதிவானது. கரூர் பரமத்தி 80 மி.மீ., குழித்துறை, துவாக்குடி தலா 60 மி.மீ., திருக்காட்டுப்பள்ளி, கன்னிமாரில் தலா 50 மி.மீ. மழை பெய்தது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். மீனவர்கள் லட்சத்தீவுகள், கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு வரும் 4-ம் தேதி வரை செல்ல வேண்டாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
தற்போது, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று உள்ளது.
இது, இன்று (ஜூன் 3) மாலை வடக்கு மகாராஷ்டிராவுக்கும் தெற்கு குஜராத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.