

கோவை மாவட்டத்தில் செயல் படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் கே.பெரியய்யா, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மற்றும் அதிகாரிகள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் களிடம் கூறியதாவது:
பில்லூர் மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான நில எடுப்பு பணிகளை துரிதப்படுத்தவும், ரூ.1,652 கோடியிலான அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் அதிகாரி களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
ரூ.127 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் உக்கடம் -ஆத்துப் பாலம் மேம்பாலம் பணிகளில் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. அனைத்து மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க உத்தர விடப்பட்டுள்ளது.
விமானநிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு நிலம் வழங்கிய வர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை விரைவாக வழங்கப் படும். மாவட்டத்தில் கோவிட்-19 சிறப்புக் கடனுதவி திட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.176 கோடி தொழிற் கடனுதவி வழங்கப்படும். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 100 சதவீத பணியாளர்களை ஈடுபடுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் 1,019 பேருந்துகள் இயக்கப் படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.