

வருவாய் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில், ரூ.10 கோடியே 76 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான வட்டாட்சியர் அலுவலகம், குடியிருப்பு மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வருவாய்த் துறை சார்பில் ரூ.8 கோடியே 75 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் மற்றும் ஜமுனாமத்தூரில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள், வட்டாட்சியர் குடியிருப்புகள் மற்றும் சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள சென்னை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரகத்தில் காலியாக உள்ள நில அளவர், வரைவாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் 8 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 4 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
சுற்றுச்சூழல் துறை
கடந்த 2016-17-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் துணை மானிய கோரிக்கையின்போது, திருவண்ணாமலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சொந்தமாக புதிய மாவட்ட அலுவலக கட்டிடம் கட்டப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 1000 சதுர மீட்டர் பரப்பில் தரை மற்றும் முதல் தளத்துடன் ரூ.2 கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், ஆர்.பி.உதய குமார், சேவூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் கே.சண்முகம், செயலர்கள் அதுல்யமிஸ்ரா, ஷம்பு கல்லோலிகர், வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.