Published : 03 Jun 2020 06:52 AM
Last Updated : 03 Jun 2020 06:52 AM

முதல்வரின் வீடு, தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

சென்னை

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் துறை கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை இந்த காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்தது.

எதிர் முனையில் பேசியவர், தமிழக முதல்வரின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். சற்று நேரத்தில் அது வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை போலீஸார், உடனடியாக இது குறித்து காவல் துறை உயர் அதிகாரி களுக்கு தெரிவித்தனர். தொடர்ந்து சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீடு, தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல், புரளி என தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து அபிராமபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, மிரட்டல் விடுத்தவர் பேசிய செல்போன் என் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத் தைச் சேர்ந்த புவனேஷ்வர்(25) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே, புதுச்சேரி முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கியவர் ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x