

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புநடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
தமிழகத்தின் சட்டம், ஒழுங்குகுறித்தும் அரசின் நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அரசிடம்இருந்து அறிக்கை பெற்று அதைமத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைப்பது வழக்கம். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார். கடந்த மார்ச்சில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு 2 முறை ஆளுநரை முதல்வர் சந்தித்துள்ளார்.
இந்நிலையில், கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் கே.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாலை 5 மணி முதல்6.20 வரை நீடித்த இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புநடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஆளுநரிடம் முதல்வர் அளித்தார்.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்வது குறித்தும் அதன்மூலம் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டது குறித்தும் ஆளுநரிடம் முதல்வர் விளக்கினார். அதற்காக அரசை பாராட்டிய ஆளுநர், கரோனா அதிகம் பாதித்துள்ள மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில் அதிக அளவில் பரிசோதனை நடப்பது சிறப்பானது என்று தெரிவித்து, பரிசோதனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
சென்னையில் தொற்று அதிகரிப்பது குறித்து முதல்வரிடம் ஆளுநர் கேட்டறிந்தார். சென்னையில் மட்டும் மருத்துவமனைகள் தவிர்த்து பல பகுதிகளில் 17,800 படுக்கைகள், தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக முதல்வர் விளக்கினார். தொற்று பாதிப்பில் இருந்து சென்னை மக்களை மீட்க ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைககள் குறித்தும் அவர்களுக்கான தங்குமிடம், உணவு மற்றும் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படும் நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர் விளக்கினார். ஒட்டுமொத்தமாக தமிழக அரசின் நடவடிக்கைகளை ஆளுநர் பாராட்டியதாக கூறப்படுகிறது.