Published : 03 Jun 2020 06:38 AM
Last Updated : 03 Jun 2020 06:38 AM

தனியார் மருத்துவமனைகளில் அதிக தொகை வசூல்; கரோனா சிகிச்சை கட்டணத்தை வரைமுறைப்படுத்த வேண்டும்: தமுமுக சார்பில் பொதுநல மனு தாக்கல்

சென்னை

கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழக அரசு கட்டணங்களை வரைமுறைப்படுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன் றத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பாக தமுமுக அறக்கட்டளை தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா சார்பில் வழக்கறிஞர் பி.வி.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நாட்டிலேயே கரோனா தொற்றில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. குடும்பத்தில் ஒருவருக்குதொற்று ஏற்பட்டால் மற்றவர்களும்பாதிக்கப்படும் சூழல் உள்ளது.கரோனாவால் பாதிக்கப்படுபவர்களிடம் ஆரம்பகட்ட பரிசோதனையில் தொடங்கி, நோய் குணமாகும்வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் தமுமுக-வுக்கு வந்துள் ளன. கட்டணம் செலுத்த மறுக்கும் நோயாளிகளை பாதியிலேயே திருப்பி அனுப்பும் கொடுமையும் நடக்கிறது.

எனவே, தனியார் மருத்துவமனைகளில் கரோனா மருத்துவசெலவுக்கான கட்டணம் எவ்வளவு என்பதை வெளி்ப்படையாக தெரிவித்து, அதை வரைமுறைப்படுத்த வேண்டும். கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள இடவசதியை தாங்களாகவே முன்வந்து தார்மீக அடிப்படையில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கித் தர உத்தரவிட வேண்டும்.

பணம் இல்லை என்பதற்காகசிகிச்சை அளிக்க மறுப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது தனியார் மருத்துவமனைகளின் கடமையாகும். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மற்ற மாநிலங்கள் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணங்கள் தொடர்பாக வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. எனவே, தமிழக அரசும் அதுபோல வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x