Last Updated : 02 Jun, 2020 07:07 PM

 

Published : 02 Jun 2020 07:07 PM
Last Updated : 02 Jun 2020 07:07 PM

மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரையை அரசு புறக்கணிக்கக்கூடாது: தினமும் 18 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்ய வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் எவ்வளவு கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்பது தொடர்பாக முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே வார்த்தைப் போர் மூண்டிருக்கிறது. பிசிஆர் பரிசோதனை தொடர்பான எண்ணிக்கையில் இவர் சொல்வதை அவர் ஏற்கவில்லை. அவர் சொல்வதை இவர் ஏற்கவில்லை.

எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி இரண்டின் கூற்றையும் கூட விட்டுவிடுவோம். தமிழ்நாடு அரசு அமைத்த வல்லுநர் குழு என்ன சொன்னது... அதனை தமிழ்நாடு அரசு பின்பற்றுகிறதா? என்று கேட்டால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதுகுறித்து தொடர்ந்து நுட்பமாகக் கவனித்து அரசுக்கு ஆக்கபூர்வமான யோசனைகளைக் கூறிவரும் மருத்துவர் புகழேந்தி கூறியதாவது:

"கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அது கரோனா தொற்றுள்ளவர்களைக் கண்டறிவது. அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அது முழு அளவிலான பரிசோதனை. அப்படிப் பரிசோதனை செய்தால்தான் நோயுள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியும், அவர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலம் நோய்ப்பரவலையும் தடுக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் போதுமான அளவில் பரிசோதனைகள் நடைபெறவில்லை என்பது வருத்தமான விஷயம்.

ஆட்சி செய்வோரும் சரி, எதிர்க்கட்சியும் சரி மருத்துவர்களோ, கரோனா குறித்த நிபுணத்துவம் பெற்றவர்களோ அல்ல. எனவேதான், அரசே வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது. அதன் தலைவரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடமியாலஜியின் துணை இயக்குநருமான டாக்டர் பிரதீப் கௌர், சென்னையில் குறைந்தபட்சம் தினமும் 10 ஆயிரம் பரிசோதனைகளாவது செய்யப்பட வேண்டும் என்றும், இதர மாவட்டங்களில் குறைந்தபட்சம் 8 ஆயிரம் பரிசோதனைகளாவது செய்யப்பட வேண்டும் என்றும் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

அதாவது, தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் தினமும் 18 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்கிறது வல்லுநர் குழு. ஆனால், இவர்களோ இன்னமும் 11 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே செய்கிறார்கள். அதிலும் கூட சென்னையில் எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டன, இதர மாவட்டங்களில் எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டன என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஒரு நோயாளி கண்டறியப்பட்டால் அவருடன் தொடர்புடைய 60 பேரைச் சோதிக்க வேண்டும் என்று நிபுணர் குழு சொல்கிறது. ஆனால், 44 பரிசோதனைகள் கூட செய்யப்படவில்லை. ஆனால், முதல்வரோ 'நாங்கள் நிபுணர் குழு சொன்னதைத்தான் செய்கிறோம்' என்று சொல்கிறார்.

இந்தியாவில் கரோனா தொற்று பரவும் வேகத்தில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. அதாவது, மொத்தத் தொற்றில் தமிழ்நாட்டின் பங்கு 13.7 சதவீதம். எனவே, பரிசோதனைகளை மிகமிக அதிகரிக்க வேண்டும். ஆனால், பரிசோதனையை அதிகரித்தால், தொற்று எண்ணிக்கை அதிகமாகி மக்கள் பீதியடைவார்கள், பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கும் என்று அரசு அதனை மறைக்க முயல்வதாகத் தெரிகிறது. மக்கள் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டியது அரசின் பொறுப்பு.

கரோனா விஷயத்தில் தமிழ்நாடு அரசிடம் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை. நிபுணர் குழு அறிக்கையையும் அரசு இதுவரையில் பொதுவெளியில் பகிரவில்லை. நமது முதல்வர் உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானியான டாக்டர் சௌமியா சுவாமிநாதனுடன் காணொலிக் கருத்தரங்கில் உரையாடிய காட்சியைத் தொலைக்காட்சி செய்திகளில் ஒரு வினாடி காட்டினார்கள். அவர் அரசுக்கு என்ன ஆலோசனை சொன்னார் என்பதை அரசும் சொல்லவில்லை. ஊடகங்களும் முழுமையாகச் சொல்லவில்லை.

முதலில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் கரோனா வார்டில் பணியாற்றிய தலைமை செவிலியர் ஜான் பிரிசில்லா மரணத்தையும், கரோனாவால் இல்லை என்று சொன்னார்கள். சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்து, பரிசோதனையில் கரோனா கண்டறியப்பட்டு கோவை மருத்துவனையில் சிகிச்சை பெற்றவரை, கோவை கணக்கில் சேர்க்காமல் சென்னை கணக்கில் சேர்த்தார்கள். இவை எல்லாம் தேவையற்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

எது எப்படியோ, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தினமும் 18 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கும், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோருக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். நாம் தாமதிக்கிற ஒவ்வொரு நாளுக்கும் விலையாக, கூடுதலாக ஒரு மாத காலம் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு இருக்கும் என்று அஞ்சுகிறேன்” இவ்வாறு மருத்துவர் புகழேந்தி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x