

‘‘நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் மோடி அறிவித்தரூ.20 லட்சம் கோடி திட்டம் என்பது ஒரு மாயை தான்,’’என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
அண்மையில் பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி திட்டத்தை அறிவித்தார். இதன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இது தொடர்பாக இன்று சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலின்போது ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாகக் கூறினார். அது நடக்கவில்லை. அதுபோன்ற மாயை தான் ரூ.20 லட்சம் கோடி திட்டமும்.
நான் சவால் விடுகிறேன். இந்தத் திட்டத்தால் யாரேனும் ஒருவர் பலன் அடைந்தேன் எனக் கூறுவார்களா என்று பாருங்கள்?. இதுபோன்ற காலக்கட்டத்தில் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் பொருளாதாரம் மீண்டெழும். ஆனால் ஏற்கனவே கடனில் இருக்கும் மக்களை மீண்டும் கடன் வாங்க சொல்லி சுமையை கூட்டிக் கொண்டே செல்கின்றனர்.
மேலும் அவர்களுக்கு வங்கி மேலாளர்கள் உடனடியாக கடன் கொடுக்கமாட்டர். கடன் கொடுக்கிறோம் என்பது போகாத ஊருக்கு வழி சொல்வது போல் உள்ளது.
இப்போதைக்கு மானியம், வட்டி தள்ளுபடி, ஜிஎஸ்டி குறைப்பு போன்ற சலுகைகளை தான் அறிவிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி கூறியது போல் ஒரு குடும்பத்திற்கு குறைந்தது ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும். அப்போது தான் அந்தப் பணத்தை அவர்கள் செலவழிப்பார்கள். பொருளாதாரம் சுழல ஆரம்பிக்கும்.
மத்திய அரசின் பொருளாதார பார்வை, மக்கள் விரோத பார்வையாக தான் உள்ளது. மூன்று மாதங்கள் கடன்தவணை செலுத்த வேண்டாம் என்பது வட்டிக்கு மேல் வட்டி என மேலும் சுமையை தான் கூட்டும்.
அதற்கு பதிலாக கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி போன்றவை அறிவிக்க வேண்டும், என்று கூறினார்.
முன்னதாக, அவர் கட்சி அலுவலகத்தில் சலவைத் தொழிலாளர்களுக்கு அவர் நிவாரண உதவி வழங்கினார்.