

மத்திய அரசின் கீழ் இயங்கும் என்டிசி பஞ்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான சம்பளப் பேச்சுவார்த்தை இன்று (02.06.2020) காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன், என்டிசி அதிகாரிகள் ஆகியோருடன், எல்பிஎஃப் ஆறுமுகம், ஏடிபி கோபால், எச்எம்எஸ் ராஜமணி, சிஐடியு பிரான்சிஸ் சேவியர், ஏஐடியுசி எம்.ஆறுமுகம், ஐஎன்டியுசி சீனிவாசன் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்களும் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.நடராஜன், “தமிழகத்தில் செயல்படும் 7 என்.டி.சி மில்களுக்கான சம்பளப் பேச்சுவார்த்தை இது. இதில், மே 17-ம் தேதி வரைக்கான ஊதியத்தை முழுமையாகவும், மே 18-ம் தேதி முதல் ஜூன் 7 வரையிலான ஊதியத்தில் 50 சதவீதத்தையும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர். ஆனால், முழு ஊதியம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக என்டிசி ஆலையை இயக்க வேண்டும் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “கோவையில் துணிக்கடைகள், நகைக்கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இதில் 400 பேர் வேலை செய்த இடத்தில் 100 பேர் மட்டும் போதும் என்று முதலாளிகள் கூறிவருகின்றனர். ஊரடங்கு காலத்திற்கான 2 மாதச் சம்பளத்தையும் வழங்கவில்லை. இதனால் இத்தொழிலாளர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இந்தப் பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஊதியத்தைப் பெற்றுத் தர வேண்டும். வேலையை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தால் மகிழ்ச்சி. அதே நேரத்தில் இங்கு பரிசோதனை நடத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்வதை விடுத்து பரிசோதனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்று பரவலாகிப் போனால் பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். அனைவரும் சேர்ந்து இந்நோயில் இருந்து மக்களைக் காப்பாற்ற போரிட வேண்டும். அதை விடுத்து எடுத்ததற்கெல்லாம் வழக்கு, கைது என்று இந்த அரசு எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
அதேசமயம், லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கருதும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஒரு பேருந்தைக்கூட இயக்கவில்லை. அப்படிப் பேருந்துகளை இயக்க மறுப்பவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இவர்களுக்குள் என்ன உறவு, என்ன ஒப்பந்தம்?” என்றும் கேள்வி எழுப்பினார்.