Published : 02 Jun 2020 06:03 PM
Last Updated : 02 Jun 2020 06:03 PM

கரோனா சிகிச்சை; தனியார் மருத்துவமனைகளுக்கு அரசே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு 

தனியார் மருத்துவமனைகளில், கரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கரோனா சிகிச்சை பெற 22 அரசு மருத்துவமனைகளை அங்கீகரித்து தமிழக அரசு, உத்தரவிட்டது. தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து, 112 தனியார் மருத்துவமனைகளையும், கரோனா சிகிச்சை பெறும் மருத்துவமனைகளாக அறிவித்த தமிழக அரசு, விருப்பப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என கடந்த ஏப்ரல் மாதம் 3-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

தனியார் மருத்துவமனைகளில் கரோனோ பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த, ரூ.4,500 கட்டணத்துக்கும் அதிகமாக ரூ. 6,000 முதல் ரூ. 8,000 வரை வசூலிக்கப்படுவதாகவும், சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவது கூறி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “தனியார் மருத்துவமனைகளில், கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நபர்களுக்கு முழு உடல் கவச உடைக்காக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.

வென்டிலேட்டர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வீதமும், ஒரு நாளைக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 12,000 வரை அறை வாடகையாக வசூலிக்கப்படுகிறது. மஹாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் கரோனா சிகிச்சை வழங்க, தனியார் மருத்துவமனைகளுக்கு அரசே கட்டணம் நிர்ணயித்துள்ளது.

தமிழகத்திலும் அதேப்போன்று தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க, கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்”. என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x