Published : 02 Jun 2020 05:57 PM
Last Updated : 02 Jun 2020 05:57 PM

மதுரையில் செருப்புத் தைக்கும் தொழிலாளர்கள் 125 பேருக்கு கரோனா நிவாரண உதவி: பாரதி யுவகேந்திரா அமைப்பு வழங்கல்

மதுரையில், செருப்புத் தைக்கும் தொழிலாளர்களுக்குக் கரோனா நிவாரண உதவியாக பாரதி யுவகேந்திரா மற்றும் அனுஷத்தின் அனுகிரஹம் அமைப்புகளின் சார்பில் இன்று அரிசி வழங்கப்பட்டது.

மதுரையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகள் 250 பேருக்கு மாதந்தோறும் 10 கிலோ அரிசியை நன்கொடையாளர்களின் உதவியுடன் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வருகிறது பாரதி யுவகேந்திரா மற்றும் அனுஷத்தின் அனுகிரஹம் அமைப்பு. கரோனா பொதுமுடக்கம் தொடங்கியதிலிருந்தே மதுரையின் பலதரப்பட்ட அடித்தட்டு மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் கொடையாளர்களின் உதவியுடன் அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.

இந்த நிலையில் இன்று, மதுரையில் செருப்புத் தைக்கும் தொழிலாளர்கள் 10 பேருக்கு அவசர உதவியாக அரசி மட்டும் இந்த அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டன.

இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய பாரதி யுவகேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு, “பொதுமுடக்கம் அமலுக்கு வந்த சில நாட்களிலேயே, திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் பட்டர்களிடமிருந்து எங்களுக்கு ஒரு கோரிக்கை வந்தது. பக்தர்களின் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதுமே கோயில்களில் பூஜை செய்யும் சிவாச்சாரியார்களுக்கும் பட்டர்களுக்கும் வருமானத்துக்கு வழியில்லாமல் போய்விட்டது. அதேநிலைக்குத் தள்ளப்பட்ட காளமேகப் பெருமாள் கோயில் பட்டர்களும் தங்களுக்கு ஏதாவது கொடுத்து உதவமுடியுமா என்று கேட்டார்கள்.

இதுபற்றி கொடையாளர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் உடனே உதவ சம்மதித்தார்கள். அவர்கள் தந்த அருட்கொடையை வைத்து காளமேகப் பெருமாள் கோயில் பட்டர்கள் மற்றும் ஊழியர்கள் 40 பேருக்கு 2,000 ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களையும் 1,000 ரூபாய் ரொக்கத்தையும் வழங்கினோம்.

இதேபோல், மதுரைக்குள் வசிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகள் 150 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு 2,000 ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று வழங்கினோம். போலீஸ் உதவியுடன் இவர்களுக்கு இந்தப் பொருட்களை கொடுத்து முடிக்க எங்களுக்கு மூன்று வார காலம் பிடித்தது.

அடுத்ததாக எங்களுக்கு இன்னொரு தகவல் வந்தது. திதி கொடுக்கும் காரியம் உள்ளிட்டவைகளுக்கு ஆச்சாரியார்களுக்கு உதவியாளர்களாகச் செல்லும் அந்தணர்களுக்கு, திதியின் போது கொடுக்கப்படும் அரிசி, காய்கனிகள், சாப்பாடுதான் அன்றைய தேவைக்கானதாக இருக்கும். இதை பிராமணார்த்தம் என்று சொல்வோம். கரோனா பொதுமுடக்கத்தால் பிராமணார்த்தம்கூட கிடைக்காமல் நிறைய அந்தணர்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். மதுரைக்குள் இருக்கும் அவர்களில் 70 பேரை அடையாளம் கண்டு சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் அவர்களுக்கான அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தோம்.

இதேபோல், சுபநிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களின் அன்றாட ஜீவனமும் கஷ்டத்தில் இருக்கிறது. அவர்களின் சிலர் தங்களுக்கு சோறுபோடும் நாதஸ்வரத்தை அடமானம் வைத்துச் சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டதாகவும் ஒரு தகவல் கிடைத்தது.

மதுரையில் அப்படி 90 வித்வான்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை 2,000 ரூபாய் மதிப்பில் வழங்கினோம். அதற்கு முன்னதாக, சீக்கிரமே நாட்டில் கரோனா அச்சம் விலக வேண்டும் என்று வேண்டி ‘மீனாட்சி தாயே நீயே துணை’ என்ற பாடலை அந்தக் கலைஞர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் வாசிக்கச் சொன்னோம். அவர்கள் வாசித்து முடித்த பிறகு நிவாரண உதவிகளை வழங்கினோம்.

இவர்களைத் தவிர்த்து, பிரபல நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாச்சலம் வகையறாவைச் சேர்ந்த நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்கள் 40 பேருக்கும் 2,000 ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கினோம்.

மதுரையைச் சுற்றியுள்ள சிறுகோயில்களில் பணிபுரிந்து தற்போது எவ்வித வருமானத்துக்கும் வழியின்றி தவித்துக்கொண்டிருக்கும் அர்ச்சகர்கள் 125 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினோம். அந்த சமயத்தில்தான், சாலையோரம் செருப்புத் தைத்து அன்றாட ஜீவனம் நடத்தும் செருப்புத் தொழிலாளர்கள் இந்த சமயத்தில் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள் என்று யோசித்தோம்.
மதுரைக்குள் அப்படியான நபர்கள் பற்றிய விவரங்களைத் திரட்டியபோது 125 பேர் பற்றிய விவரங்கள் கிடைத்தன.

எங்கள் கையில் இருந்த நிதியை வைத்து முதல்கட்டமாக இன்று அவர்களில் 10 பேருக்கு மட்டும் தலா 10 கிலோ அரிசியை மதுரை காவல் துறை உதவி ஆணையர் மணிவண்ணன் மற்றும் தொடர்ந்து எங்களின் சேவைக்கு கொடையளித்து வரும் ஆடிட்டர் சேதுமாதவா ஆகியோர் மூலம் வழங்கி இருக்கிறோம். எஞ்சியவர்களுக்கும் இன்று வழங்கியவர்களுக்கும் சேர்த்து இந்த வார இறுதிக்குள் 2,000 ரூபாய்க்கான அரசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கத் தீர்மானித்திருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x