

சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்கு அதிகளவு கரோனா தொற்று கண்டறியப்படுகிறது. மதுரை எல்லீஸ் நகரில் சென்னையில் இருந்து வந்த நபருக்கு ‘கரோனா’ கண்டறியப்பட்டதால் இன்று அப்பகுதிக்கு மாநகராட்சி பணியாளர்கள் ‘சீல்’ வைத்தனர்.
‘கரோனா’ தொற்று சீனாவில் கண்டறியப்பட்டபோது அவர்கள் மூலமே இந்த நோய் பரவுவதாக உலக நாடுகள் கவலையடைந்தன. அதன்பிறகு இந்த நோய் உலகம் முழுவதும் பரவியநிலையில் இந்தியாவில் தற்போது இந்த நோய் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இந்த நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக கண்டறியப்படும் நோயாளிகளில் 80 சதவீதத்திற்கு மேலானவர்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
அதனால், சென்னையில் மட்டும் இன்னும் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. அங்குள்ள மக்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒருவர் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றால் அவர் அந்த மாவட்டத்திற்கு சென்றடைந்தவுடன் கண்டிப்பாக ‘கரோனா’ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
‘கரோனா’ பரிசோதனையில் உறுதி செய்யப்படாவிட்டாலும் 14 நாட்கள் வரை அவர் வீடுகளிலே தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மதுரையில் வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருகிறவர்களுக்கு மட்டுமே அதிகளவு ‘கரோனா’ தொற்று அதிகளவு கண்டறியப்படுகிறது.
உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு, நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ‘கரோனா’ கண்டறியப்படுகிறது.
சென்னையில் இருந்து மதுரை எல்லீஸ் நகருக்கு வந்த ஒரு இளைஞருக்கு ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதி விட்டு மக்கள் வெளியேறாதப்படி மாநகராட்சி பணியாளர்கள் எல்லீஸ் நகருக்கு சீல் வைத்தனர்.