Last Updated : 02 Jun, 2020 05:15 PM

 

Published : 02 Jun 2020 05:15 PM
Last Updated : 02 Jun 2020 05:15 PM

திருச்சி திமுகவில் 3 வட்டச் செயலாளர்கள் நீக்கம்: கே.என்.நேரு - மகேஷ் பொய்யாமொழி இடையேயான பனிப்போரால் கட்சி நிர்வாகிகள் தவிப்பு

கே.என்.நேரு - மகேஷ் பொய்யாமொழி: கோப்புப்படம்

திருச்சி

திருச்சி மாவட்ட திமுகவில் 3 வட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி இடையே நடக்கும் பனிப்போரால் தவிப்புக்குள்ளாகி வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அண்மையில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிர்வாக வசதிக்காக திருச்சி மாவட்ட திமுக வடக்கு, மத்திய, தெற்கு என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

இதில் வடக்கு மாவட்டச் செயலாளரான காடுவெட்டி ந.தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளரான வைரமணி ஆகியோர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் என்பதால் இப்பகுதிகளில் தற்போதும் கே.என்.நேருவை மையப்படுத்தியே அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

ஆனால் தெற்கு மாவட்டத்தில் அவ்வாறு நடத்தப்படுவதில்லை. இதனால் மகேஷ் பொய்யாமொழி நடத்தும் நிகழ்ச்சிகளில் கே.என்.நேரு ஆதரவாளர்கள் சிலர் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

இந்த சூழலில் கே.கே.நகர் பகுதிக்குட்பட்ட 37-வது வட்டச் செயலாளர் சீனு.தியாகராஜன், மலைக்கோட்டை பகுதிக்குட்பட்ட 9-வது வட்டச் செயலாளர் ஜி.பாலமுருகன், 14-வது வட்டச் செயலாளர் எம்.முத்துவேல் ஆகியோர் சரிவர கட்சிப் பணியாற்றாததால் மூவரும் அப்பதவியிலிருந்து நீக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 1) அறிவித்தார்.

இவர்களுக்கு பதிலாக 37-வது வட்டத்துக்கு ஏ.பன்னீர்செல்வம், 9-வது வட்டத்துக்கு ஜே.சிவக்குமார், 14-வது வட்டத்துக்கு ஒய்.சிலம்பரசன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கே.என்.நேருவின் ஆதரவாளர்களாக இருந்த வட்டச் செயலாளர்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளது திருச்சி மாவட்ட திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுபவம் வாய்ந்தவர்கள் நீக்கம்

இதுகுறித்து கே.என்.நேரு ஆதரவாளர்கள் கூறும்போது, "திருச்சி மாவட்ட திமுகவில் தற்போது பொறுப்பில் உள்ள அனைத்து நிர்வாகிகளுமே நல்ல அனுபவம் உள்ளவர்கள். களப் பணியாளர்கள். எனவே, தேர்தல் முடியும் வரை இவர்களை மாற்ற வேண்டாம் என சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெற்கு, வடக்கு, மத்திய மாவட்டச் செயலாளர்களிடம் கே.என்.நேரு வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

அப்படியிருந்தும்கூட, தற்போது இதே ஊரில் முதன்மைச் செயலாளராக உள்ள கே.என்.நேரு, மாநகரச் செயலாளராக உள்ள மு.அன்பழகன் ஆகியோரிடம் ஆலோசனைக் கேட்காமலேயே திமுக மேலிடத்தில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, 3 வட்டச் செயலாளர்களை மகேஷ் பொய்யாமொழி நீக்கியுள்ளார். அவருக்கு பதிலாக தனக்கு வேண்டிய 3 பேரை அப்பதவிக்கு நியமித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் கட்சியினர் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். கட்சியை வலுவிழக்கச் செய்யும்" என்றனர்.

தேர்தல் பணிகளுக்காக மாற்றம்

மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளர்கள் கூறும்போது, "தெற்கு மாவட்டச் செயலாளராக மகேஷ் பொய்யாமொழியை அறிவித்ததிலிருந்து இந்த மூவரும் ஒருமுறைகூட வந்து அவரைச் சந்திக்கவில்லை. அவர்களது பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுத்தாலும் வருவதில்லை. பகுதி செயலாளர்களுடன் இணைந்து செயல்படுவதில்லை. கட்சியில் யாருக்கு வேண்டுமானாலும் விசுவாசமாக இருக்கலாம். ஆனால், மாவட்டச் செயலாளருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டாமா? அவர் சொல்வதைக் கேட்க வேண்டாமா?

இதுபோன்ற நபர்களை பதவியில் வைத்திருந்தால், திட்டமிட்டபடி தேர்தல் பணியாற்ற முடியாது எனக்கருதி தனது பேச்சைக் கேட்டு செயல்படக்கூடியவர்களை மகேஷ் பொய்யாமொழி அப்பொறுப்புகளில் நியமித்துள்ளார். மற்றபடி இதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை" என்றனர்.

இருதலைக் கொள்ளி எறும்பாய்...

திமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, "ஒருவர் முதன்மைச் செயலாளராக உள்ளார். மற்றொருவர் மாவட்டச் செயலாளராக உள்ளார். இருவருமே மேலிடத்தில் செல்வாக்குடன் இருப்பதால், இருவரையும் அனுசரித்து செல்ல வேண்டிய நிலைக்கு நிர்வாகிகள் தள்ளப்பட்டுள்ளோம். இவரிடம் சென்றால் அவருக்குப் பிடிக்காது, அவரிடம் சென்றால் இவருக்கு பிடிக்காது என்ற நிலை காணப்படுகிறது.

ஆனால் நேரில் பார்க்கும்போது ஒற்றுமையாக இருப்பதுபோல காட்டிக் கொள்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் பனிப்போரால், நிர்வாகிகள் அனைவரும் 'இருதலைக் கொள்ளியில் சிக்கிய எறும்பு' போல தவித்து வருகிறோம்' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x