Published : 02 Jun 2020 05:09 PM
Last Updated : 02 Jun 2020 05:09 PM

ஓசூரில் 1.68 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

ஓசூர் கோட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள 1.68 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் ஓசூர் கோட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு முதல் சுற்று கோமாரி (கால் மற்றும் வாய் நோய்) நோய்த் தடுப்பூசி முகாம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இடையில் கரோனா ஊரடங்கினால் இப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓசூர் கோட்டத்தில் மீண்டும் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஓசூர் ஒன்றியம் கோபனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற கால்நடை தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்வில் ஓசூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் இளவரசன் கலந்து கொண்டு கால்நடைகளுக்குக் கோமாரி தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொருத்தி, கோமாரி தடுப்பூசி போடும் பணிகளில் எஸ்.முதுகானப்பள்ளி கால்நடை மருந்தக மருத்துவர் வித்யா தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஓசூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் இளவரசன் கூறியதாவது, ’’ஓசூர் கோட்டத்தில் உள்ள கிராமங்களில் 1.68 லட்சம் கால்நடைகள் உள்ளன. இந்த கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் அந்தந்த கிராமத்துக்கே சென்று மருத்துவக் குழுவினர் முகாமிட்டு கால்நடைகளுக்குக் கோமாரி தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுகின்றனர். இவற்றுடன் கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொருத்தப்பட்டு கால்நடைகளின் எண்ணிக்கையைப் பதிவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த கால்நடை முகாம்களுக்கு வரும் கால்நடை உரிமையாளர்கள் தங்களின் ஆதார் எண், கைபேசி எண் ஆகியவற்றைத் தடுப்பூசி குழுவினரிடம் வழங்க வேண்டும்.மேலும் கால்நடை உரிமையாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கால்நடைகளுக்கு த்தடுப்பூசி போடும் இந்த அரிய வாய்ப்பை கால்நடை உரிமையாளர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x