

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து ஓடுவதாக அரசு அறிவித்த தினத்திற்கு ஒரு நாள் தாமதமாக இன்று பேருந்துகள் இயக்கப்பட்டன.
கரோனா ஊரடங்கிற்கு பின்னர் தமிழகத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் நேற்று அரசுப் பேருந்துகள் இயங்கின.
குமரி மாவட்டத்தில் பிரதான பேருந்து நிலையமான வடசேரி பேருந்து நிலையம் தற்காலிக காய்கறி சந்தையாக மாற்றப்பட்டிருந்ததால் மாற்று ஏற்பாடு செய்யும் வகையில் நேற்று பேருந்து ஓடவில்லை.
ஒரு நாள் தாமதமாக இன்று நாகர்கோவில் அண்ணா பேரூந்து நிலையத்தில் இருந்து காலை 6 மணி முதல் பேருந்துகள் இயங்கப்பட்டன.
இதைப்போல் வடசேரி பேரூந்து நிலையத்தில் இருந்து ஒரு புறம் காய்கறி சந்தை செயல்பட்டாலும், மறு பகுதியில் இருந்து திருநெல்வேலிக்கு 2 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
இதைப்போல் திருச்செந்தூர், தூத்துக்குடிக்கும் இரு பேரூந்துகள் இயக்கப்பட்டது. திருவனந்தபுரத்திற்கும், களியக்காவிளைக்கும் பேரூந்துகள் இயக்கப்படவில்லை. மார்த்தாண்டத்துடன் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பேருந்துகள் ஓடினாலும் குறைந்த அளவு பயணிகள் சமூக இடைவெளியுடன் பயணம் செய்தனர். முகக்கவசம் அணிந்த பயணிகள் மட்டும் பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பயணிகளுக்கு சானிடைசர் வழங்கப்பட்டன.