

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 713 இந்தியர்களுடன் இந்திய கடற்படை கப்பல் 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' இன்று காலை தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சேர்ந்தது.
இதில் 693 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மருத்துவப் பரிசோதனை மற்றும் குடியுரிமை சோதனை முடிந்த பிறகு அனைவரும் அரசுப் பேருந்துகளில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரோனா ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் 'ஆபரேசன் சமுத்திர சேது' திட்டத்தின் கீழ் தாய் நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவ்வாறு இலங்கையில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 713 பேருடன் இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' கப்பல் நேற்று மாலை கொழும்புத் துறைமுகத்தில் இருந்து கிளம்பியது.
இந்த கப்பல் இன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கரித்தளத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 693 பேர் வந்துள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 58 பேர். கேரளாவைச் சேர்ந்த 3 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேர், புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட மேலும் 20 பேரும் இக்கப்பலில் வந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.
கப்பலில் இருந்து இறங்கியவுடன் அனைவருக்கும் கரோனா அறிகுறிகள் இருக்கிறதா என மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் பேருந்துகளில் பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சுங்க மற்றும் குடியுரிமை சோதனை முடிந்ததும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 25 அரசுப் பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டும் தூத்துக்குடி தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்காக அவர்களிடம் இருந்து ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இந்த பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வந்தால் அவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பாசிட்டிவ் வந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக வரும் 7-ம் தேதி மாலத்தீவில் இருந்தும், 17-ம் தேதி ஈரானில் இருந்தும் இரண்டு கப்பல்களில் தலா 700 இந்தியர்கள் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்துவரப்படவுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.