Published : 02 Jun 2020 04:11 PM
Last Updated : 02 Jun 2020 04:11 PM

உபகரணங்கள் எண்ணிக்கையில் ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்: முதல்வர் பேட்டி 

தமிழகத்தில் பிசிஆர் கிட் எண்ணிக்கை குறித்த ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் வென்டிலேட்டர் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சிக்க வேண்டாம் என தெரிவித்தார்.

மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியப்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் கூறியதாவது:

“எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டு பத்திரிகைகளில் வந்துள்ளது. முதல்வர் மாவட்ட ஆட்சியாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தில், முதல்வர் தெரிவித்ததாக கூறியுள்ளார். 9.14 லட்சம் பிசிஆர் கிட் உள்ளதாகவும், அதில் 4.66 லட்சம் பரிசோதிக்கப்பட்டு விட்டதாகவும். மீதம் 4.47 லட்சம் கருவிகள் இருக்கவேண்டும் என்றும் ஆனால் முதல்வர் 1.76 லட்சம் கையிருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதில் ஒன்றை தவற விட்டு விட்டார் மீதமுள்ள 2 லட்சத்து 71 ஆயிரம் பிசிஆர் கிட் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்படி அனுப்பி வைக்கப்பட்டால்தான் அந்த கருவியை பயன்படுத்தி பரிசோதனை செய்ய முடியும். வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான செய்தியை பரப்பியுள்ளார். ஊரடங்கு காலத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு விளம்பரப்படுத்துவதாக என்னைப்பற்றி சொல்கிறார்.

அவர்தான் விளம்பரப்படுத்துவதற்காக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று நான் சொல்கிறேன். அரசு 272000 கிட்டுகள் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை விட்டுவிட்டு 1.76 லட்சம் கிட் இங்கு கையிருப்பில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார், அது உண்மையல்ல. அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுவரை 15 லட்சத்து 45 ஆயிரத்து 700 பிசிஆர் கிட் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பெறப்பட்டது 11லட்சத்து 51 ஆயிரத்து 700. நன்கொடையாக பெறப்பட்டது 53,516, மத்திய அரசு வழங்கியது 50,000 பிசிஆர் கிட். மொத்தம் 12 லட்சத்து 55 ஆயிரத்து 216. தற்போது இருப்பு உள்ளது 4 லட்சத்து 59 ஆயிரத்து 800 கருவிகள் நம்முடைய டி.என்.எம்.எஸ்.சியில் உள்ளது.

மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்கு அளிக்கப்பட்டது 7 லட்சத்து 95 ஆயிரத்து 416 , பரிசோதனை செய்யப்பட்ட கருவிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 3 ஆயிரத்து 339, தற்போது ஆங்காங்கே பரிசோதனை மையங்களில் இருப்பு உள்ள கருவிகளின் எண்ணிக்கை 2லட்சத்து 92 ஆயிரத்து 027. இதுதான் தற்போதைய நிலை.

கண்ணுக்கு தெரியாத கிருமி அது. ஏழை மக்கள் அதிகம் பாதிப்படையக் கூடாது என்பதைத்தான், பிற மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களை பரிசோதனை செய்ததில் தொற்று இருந்தவர்கள் எண்ணிக்கை 1627 என்கிற எண்ணிக்கை உள்ளது.

வென்டிலேட்டர் குறைவாக இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசிடம் 2741 வென்டிலேட்டர் அரசிடமே உள்ளது. புதிதாக 620 வெண்டிலேட்டர் வாங்கப்பட்டுள்ளது. 630 வென்டிலேட்டர் தனியார் மருத்துவமனையில் உள்ளது. மொத்தம் 3330 வென்டிலேட்டர் உள்ளது. தொற்று ஏற்பட்டு வென்டிலேட்டர் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் அளவுக்கு நோய் முற்றவில்லை. இதுவரை மொத்தமே 5 பேர் தான் வென்டிலேட்டர் பயன்படுத்தும் நிலை உள்ளது.

வேண்டுமென்றே தவறான தகவலை அளித்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x