Published : 02 Jun 2020 04:22 PM
Last Updated : 02 Jun 2020 04:22 PM

பத்தாம் வகுப்பு தேர்வை இரண்டு மாதங்களுக்குத் தள்ளி வைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பத்தாம் வகுப்பு தேர்வை இரண்டு மாதங்களுக்குத் தள்ளி வைக்கக் கோரி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10-ம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுகளை இரண்டு மாதங்களுக்குத் தள்ளி வைக்கக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து, பெற்றோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜூன் 15-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், 9 லட்சத்து 79 ஆயிரம் பத்தாம் வகுப்பு மாணவர்களும், 8 லட்சத்து 41 ஆயிரம் 11-ம் வகுப்பு மாணவர்களும், 12-ம் வகுப்பு தேர்வு எழுதாத 36 ஆயிரத்து 89 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு பணிக்கு 3 லட்சத்து 87 ஆயிரத்து 623 ஆசிரியர்களும், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் என 22 லட்சத்து 43 ஆயிரம் பேர் தேர்வுக்கான பணிகளில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், இத்தனை பேரின் ஆரோக்கிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்புக்கு மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 690 தேர்வு மையங்களிலும், 11-ம் வகுப்புக்கான 7,400 தேர்வு மையங்களிலும், எத்தனை சுகாதார பணியாளர்கள் பணியமர்த்தப்படுவர் என அரசு தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்ட மனுதாரர், ஊரடங்கால் விடுதிகளில் புத்தகங்களை விட்டுச் சென்ற மாணவர்களால் தேர்வு எழுதுவது கடினம் என்பதால் 15 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x