

தஞ்சாவூர் அருகே ரத்த காயங்களுடன் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் ஒருவர், 4 மாதமாக வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய ஒரு பெண் உட்பட மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூரை அடுத்த செங்கிப்பட்டி கடைவீதி அருகே நேற்று (ஜூன் 1) உடலில் ரத்த காயங்களுடன் வடமாநில இளம் பெண் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், பாதுகாப்புப் பணியில் இருந்த செங்கிப்பட்டி போலீஸாரும் அப்பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீஸார் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
போலீஸார் விசாரணையில் தெரியவந்ததாவது:
ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இளம்பெண் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 20 வயது நிரம்பியவர். அந்தப்பெண் பெங்களூருவில் முகேஷ் மல்லிகா பார்க் பகுதியில் குடும்பத்தினருடன் தங்கி இருந்ததுள்ளார். ஐந்து மாதங்களுக்கு முன்பு அவரை அவருடைய சித்தியின் மகள் மூலம் வீட்டு வேலை செய்ய தஞ்சாவூருக்கு அனுப்பி உள்ளனர்.
பெங்களூருவில் இருந்து பேருந்தில் திருச்சி வந்த அவரை தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியை சேர்ந்த செந்தில்குமார் (44) என்பவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து காரில் தஞ்சாவூரில் உள்ள அவருடைய வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
வீட்டு வேலை செய்ய வந்துள்ளதாக நினைத்திருந்த அந்த இளம்பெண்ணுக்கு அப்போது தான் அதிர்ச்சி காத்திருந்தது. செந்தில்குமார் அவரை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், அவரது மனைவி ராஜம் என்பவரும் அந்த பெண்ணை பல்வேறு வகையிலும் துன்புறுத்தி உள்ளார்.
மேலும், அந்த வீட்டுக்கு பல ஆண்கள் வந்துள்ளனர். அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறு செந்தில்குமார் வற்புறுத்தி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அவரை கண்மூடித்தனமாக செந்தில்குமார் தாக்கி உள்ளார். கொலை செய்து விடுவதாக மிரட்டி அப்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். சில சமயங்களில் மறுப்பு தெரிவிக்கும்போது உணவு வழங்காமலும் கம்பியால் அடித்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார்.
ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு மாத காலமாகவே இதே நிலை நீடித்து வந்துள்ளது. இந்நிலையில், அப்பெண்ணின் தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி அவருடைய சித்தி மகள் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த இளம்பெண் ஊருக்குப் போக வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த செந்தில்குமாரும் அவருடைய மனைவியும் நேற்று அப்பெண்ணை கட்டையாலும், கைகளாலும் தலைமுடியை பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர். அப்போதும் அந்த பெண் பெங்களூரு செல்ல வேண்டும் என பிடிவாதமாக இருந்துள்ளார்.
உடனே செந்தில்குமார், ஒரு பெண், மேலும் இரண்டு ஆண்கள் என மொத்தம் நான்கு பேர் இளம்பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் - திருச்சி சாலையில் சென்றனர். வழியிலும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். காரிலும் அவரை அடித்து உதைத்து உள்ளனர். செங்கிப்பட்டி அருகே உள்ள பூதலூர் பிரிவு சாலை அருகே வந்தபோது செந்தில்குமார் அந்த பெண்ணை காலால் எட்டி உதைத்து காரில் இருந்து வெளியே வீசி விட்டு சென்றுள்ளார்.
பலத்த காயமடைந்து அவர் தட்டுத்தடுமாறி அருகில் உள்ள செங்கிப்பட்டிக்கு நடந்து வந்துபோது அவரை மீட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இளம்பெண் கொடுத்துள்ள புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீஸார் தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியை சேர்ந்த செந்தில்குமார், அவருடைய மனைவி ராஜம் மற்றும் இரண்டு ஆண்கள் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகியுள்ளவர்களை தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றொரு பரிசோதனை மேற்கொண்டதில் அவர் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.