

சென்னையில் நோய்ப்பரவல் அதிகமாக இருக்க மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது. பொதுமக்கள் அரசு சொல்லும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் அதிகரித்துவரும் கரோனா தொற்று குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அமைச்சர்கள், காவல் உயர் அதிகாரிகளுடன் அம்மா மாளிகையில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“இன்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அமைச்சர்கள், 15 மண்டலங்களில் உள்ள அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்கள்.
சென்னையில் மக்கள் நெருக்கமாக வாழும் நிலை உள்ளது. அதனால் நோய்ப்பரவல் அதிகரித்து வருவதால் அதைக்கட்டுப்படுத்துவது குறித்து தெரிவித்துள்ளார்கள். தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 13000 பரிசோதனைகள், சென்னையில் 4000 பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
யார் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் தொடர்புடையவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் இன்றைய தினம் 23495 பேருக்கு தொற்று கண்டறியப்ப்ட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 56 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சரியான முறையில் மருத்துவர்களும், செவிலியர்களும் சிகிச்சை அளிக்கப்பட்ட அடிப்படையில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டிலேயே குணமடைந்தோர் எண்ணிக்கை நம் மாநிலத்தில் தான் அதிகம் உள்ளது. அதேப்போன்று மரண விகிதமும் 0.80 சதவீதம் என்கிற அளவில்தான் உள்ளது.
சென்னையைப் பொருத்தவரை பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. ரேஷன் உணவுப்பொருட்கள் தங்குத்தடையின்றி வழங்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் அரிசி,சர்க்கரை, பருப்பு, எண்ணெய் விலையில்லாமல் கொடுத்தோம். மே மாதம் 20 கிலோ வழங்கப்பட்ட அரிசி 50 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் மாதமும் 4 பேர் அடங்கிய அரிசி குடும்ப அட்டைதாரருக்கு 50 கிலோ அரிசி, சர்க்கரை பருப்பு கொடுக்கிறோம். அம்மா உணவகத்தில் மே 31 வரை விலையில்லா உணவு கொடுத்தோம்.
பொதுமக்கள் சென்னையில் தளர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று ஆட்டோ, டாக்சி, முடிதிருத்தும் நிலையம், அழகு நிலையம், நகைக்கடைகள் உள்ளிட்டவைகளுக்கு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது, 50 சதவீத மக்கள் அமர்ந்து உணவு உண்ண அனுமதி அளிக்கப்படுகிறது.அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி தளர்வுகளை பின்பற்ற வேண்டும்.
வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் 17,500 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75000 படுக்கை வசதிகள் உள்ளது. எந்த வகையிலும் பின்னடைவு இல்லை. சென்னை மாநகராட்சியில் 1.5 கோடி முகக்கவசம் வாங்கி ஏழை எளிய மக்களுக்கு அளித்துள்ளனர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக முகக்கவசம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 87 லட்சம் பேர் உள்ளனர். நிறையே பேர் தொழிற்சாலைகளுக்கு பணியாற்ற, பணிக்கு செல்கின்றனர். பொதுமக்கள் காய்கறி, மளிகைக்கடை, மீன் மார்க்கெட், இறைச்சிக்கடைக்கு செல்கிறீர்கள் வெளியில் செல்லும்போது சமுக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கைகால்களை சுத்தமாக கழுவவேண்டும்.
அரசு அறிவித்த வழிமுறைகள் பின்பற்ற வேண்டும். தமிழக மக்கள் அரசு அறிவித்த வழிகாட்டுமுறைகளை தயவுசெய்து பின்பற்ற வேண்டும். வெளிநாடுகளில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. அரசு அறிவித்த வழிகாட்டுமுறைகளை மக்கள் பின்பற்றியதால் அங்கு நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. அதேப்போன்று இங்கும் பொதுமக்கள் அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.