Published : 02 Jun 2020 12:45 PM
Last Updated : 02 Jun 2020 12:45 PM

தமிழகம் முழுவதும் சுமார் ரூ.500 கோடியில் குடிமராமத்துப் பணிகள்: அமைச்சர் வேலுமணி 

கோவை மாவட்டத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டப் பாசன வாய்க்கால் பகுதிகளில் குடிமராமத்து திட்டப் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, தமிழகத்தில் 499.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

சூலூர், தாளக்கரை ஊராட்சி, பச்சாகவுண்டன் பாளையம் ஆகிய பகுதிகளில் குடிமராமத்துப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி.கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்த பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தமிழக அரசு விவசாயத்தையும், விவசாயிகளின் நலனையும் காக்க அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கும் குடிமராமத்துத் திட்டமே இதற்குச் சான்று. இத்திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் நீர் வரத்து வாய்க்கால், கால்வாய்களில் இருக்கும் புதர்களை அகற்றுதல், ஏரிக் கரைகளைப் பராமரித்தல், வாய்க்கால்கள், கால்வாய்களில் கொள்ளளவுக்கு அதிகமாகப் படிந்துள்ள மண்ணை அகற்றுதல், மேடு பள்ளங்களைச் சமன் செய்தல், மதகுகள், அடைப்பான்கள், மிகை நீர் கலிங்குகள், குறுக்குக் கட்டுமான அமைப்புகளைச் சீரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல் பழமையும், பெருமையும் வாய்ந்த நொய்யல் ஆற்றினை மீட்டெடுக்கும் வகையில் 158 கிலோமீட்டர் நீளத்திற்குச் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இது நொய்யல் ஆற்றுப் பாசனத்தைச் சார்ந்து விவசாயம் செய்து வரும் கோவை மாவட்ட விவசாயிகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்.

குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு ஆழியாறு வடிநிலக் கோட்டத்தின் வாயிலாக 3.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 பணிகள்; பரம்பிக்குளம் வடிநிலக் கோட்டத்தின் வாயிலாக 3.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21 பணிகள்; பவானிசாகர் அணைக்கோட்டம் வாயிலாக 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒரு பணி என மொத்தம் 7.43 கோடி ரூபாயில் 45 குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இத்திட்டத்தினைச் செயல்படுத்தியதன் மூலம் கோவை மாவட்டத்தில் 30,130.47 ஹெக்டேர் நிலங்கள் முறையான பாசன வசதியைப் பெற்றுள்ளன. கால்வாய்களில் தலைப்பு முதல் கடைமடை வரை உள்ள பாசன விவசாயிகள் அனைவருக்கும் சரிசம விகிதத்தில் தண்ணீர் கிடைத்தது. இதன் பலனாக உணவு உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

2020-2021-ம் ஆண்டிற்குக் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறை மூலம் தமிழ்நாட்டில் 499.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.”

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x