தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு: மாபெரும் தேசப்பற்று மிக்க தலைவர்; எல்.முருகன் இரங்கல்

எல்.முருகன்: கோப்புப்படம்
எல்.முருகன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, எல்.முருகன் இன்று (ஜூன் 2) வெளியிட்ட இரங்கல் செய்தி:

"அரசியல், ஆன்மீகம், கல்வி என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும்.

சேலம் நகராட்சி கல்லூரியில் பட்டம் பயின்ற கே.என்.லட்சுமணன் தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர், மாநில பொதுச் செயலாளர் பின்னர் மாநிலத் தலைவர் என்று படிப்படியாக பல்வேறு பதவிகளை அலங்கரித்தவர். ஒன்பது ஆண்டுகளாக தமிழக பாஜகவின் தலைவராக விளங்கினார்.

2001-ல் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970-ல் கே.என்.லட்சுமணனும் நா.பா.வாசுதேவனும் 35 மாணவர்களோடு தொடங்கிய ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி இன்று 10 ஆயிரம் மாணவர்கள் பயிலும் சிபிஎஸ்இ பள்ளியாக சேலம் பகுதியில் சிறந்து விளங்குகிறது.

தீனதயாள், வாஜ்பாய் ஆகியோர் முதல் அத்வானி, பிரதமர் நரேந்திர மோடி வரை அனைவரிடமும் நெருக்கமாக திகழ்ந்தார்.

கே.என்.லட்சுமணன்: கோப்புப்படம்
கே.என்.லட்சுமணன்: கோப்புப்படம்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 21-ம் தேதி அன்று கே.என்.லட்சுமணனை தொடர்பு கொண்டு அவர் மற்றும் அவரது குடும்பத்தினரது உடல் நலம் குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது. 2006 முதல் இன்று வரை தேசியப் பொதுக்குழு உறுப்பினராகவும் பணிபுரிந்து வந்தார்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை அரப்பணித்துக் கொண்ட மாபெரும் தேசப்பற்று மிக்க தலைவர் இவர். அனைவரிடமும் அன்பு பாராட்டும் பெருமை மிக்க தலைவர் கே.என்.லட்சுமணனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் தமிழக பாஜகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்"

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in