Published : 02 Jun 2020 07:09 AM
Last Updated : 02 Jun 2020 07:09 AM

சிலை கடத்தல் வழக்குகளின் கேஸ் டைரி மாயம்: டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 4 வாரம் அவகாசம்

சென்னை

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்திருந்த மனு:

தமிழகத்தின் தொன்மையான சுவாமி சிலைகள் சர்வதேச கடத்தல் கும்பலால் கொள்ளை யடிக்கப்பட்டு வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் விற்கப்பட்டுள் ளது. இதில் அரசியல்வாதிகள், போலீ்ஸ் உயரதிகாரிகள், அற நிலையத் துறை அதிகாரிகள் என பலருக்கும் தொடர்புள்ளது.

இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் புலன் விசாரணை அடங்கிய கேஸ் டைரிகள் திடீரென மாய மாகியுள்ளன. இதனால் அந்த வழக்குகள் கைவிடப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியுள்ளனர். விசாரணை அதிகாரிகளும், குற்றவாளிகளுடன் கைகோர்த்து சிலை கடத்தல் வழக்குகளை மூடி மறைக்கின்றனர். எனவே, இந்த 41 வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவரத் தடை விதிக்க வேண்டும். இதன் கேஸ் டைரிகள் மாயமானது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி-க்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் காணொலிக் காட்சி மூலம் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆஜராகி, ‘‘ இதில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது’’ என வாதிட்டார்.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘‘கரோனா பிரச்சினையால் போலீ்ஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்’’ என தெரிவித் தார். அதையடுத்து விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதற்குள் டிஜிபியும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x