Published : 02 Jun 2020 06:45 AM
Last Updated : 02 Jun 2020 06:45 AM

கரோனா ஊரடங்கு தளர்வால் சென்னையில் 69 நாட்களுக்கு பிறகு ஆட்டோக்கள் இயங்கின

கரோனா ஊரடங்கு தளர்வால் சென்னையில் 69 நாட்களுக்கு பிறகு பல்வேறு இடங்களில் நேற்று மீண்டும் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊடரங்கு உத்தரவு அமலானதால், கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் ஆட்டோ போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, ஊரடங்கில் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டதால், கடந்த வாரம்சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கின.

இதற்கிடையே, தமிழக அரசின் ஊரடங்கில் சற்று தளர்வு அளிக்கப்பட்டு சென்னையிலும் ஆட்டோக்களை இயக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், சென்னையில் நேற்று காலை முதல் ஆட்டோக்கள் இயங்கின. இதேபோல், ஆட்டோ நிறுத்தங்களில் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. வங்கிகள், மருத்துவமனைகள், தனியார் நிறுவன ஊழியர்கள் ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.

இதுதொடர்பாக ஆட்டோ தொழிலாளர்கள் சிலர் கூறும்போது, “நீண்ட நாட்களாக ஆட்டோக்கள் ஓடாததால், நாங்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளோம். அன்றாட செலவுக்கு பணம்இல்லாமலும், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமலும் கஷ்டப்பட்டோம். இந்த சூழலில் தமிழக அரசு சென்னையில் ஆட்டோக்கள் இயக்க அனுமதி அளித்துள்ளது எங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனாலும், ஊரடங்கு நீடிப்பதால், மக்கள்நடமாட்டம் அதிகமாக இல்லாததால், சவாரியும் குறைவாகத்தான் வருகிறது.’’ என்றனர்.

60 ஆயிரம் ஆட்டோக்கள்

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) மூத்த நிர்வாகி ஏ.எல் மனோகரன் கூறும்போது, “சென்னையில் கடந்த69 நாட்களுக்கு பிறகு ஆட்டோக்கள் இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், மொத்தமுள்ள 90 ஆயிரம் ஆட்டோக்களில் 60 ஆயிரம் ஆட்டோக்கள் மீண்டும் இயங்க தயாராகி விட்டன.

ஆனாலும், பயணிகள் இல்லாததால், பெரிய அளவில் வருவாயை ஈட்ட முடியவில்லை. எனவே, கரோனா பாதிப்பு கால சிறப்பு நிதியாக தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x