Published : 02 Jun 2020 06:38 AM
Last Updated : 02 Jun 2020 06:38 AM

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.235 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா- முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் அமைய உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழில்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். 10 ஏக்கர் நிலப்பரப்பில் 5 லட்சத்து 57 ஆயிரம் சதுரஅடியில் 21 அடுக்குமாடி கட்டிடமாக இந்த பூங்கா அமைகிறது. அங்கு நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்கள், தொழில்மையங்கள், பொது கட்டமைப்புகள், ஆகாயப் பூங்கா என பல்வேறு வசதிகள் வர உள்ளன. சுமார்25 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் இத் திட்டம், 24 மாதங்களில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க ‘கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற திட்டத்தை முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 6 சதவீத வட்டிமானியத்துடன், பிணை சொத்துஇல்லாமல் ரூ.25 லட்சம் வரை கடன்வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 855 பேருக்கு ரூ.112 கோடி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் 5 குறு, சிறு,நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ.25 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் நேற்று வழங்கினார்.

16 துணை மின்நிலையங்கள்

மின்துறை சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ஏமப்பள்ளியில் ரூ.10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 100/22 கி.வோ. துணைமின் நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார். அத்துடன் திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை, கோவை, தஞ்சை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.224 கோடியே 91 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 15 துணை மின் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா, எம்.சி.சம்பத், கே.பாண்டியராஜன், தலைமைச் செயலர் கே.சண்முகம், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x