

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 5வது நாளாக நேற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் தடியடி நடத்திய தால் 10-க்கும் மேற்பட்ட மாணவர் கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து பேராசிரியர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களில் ஒரு பிரிவினர் துணைவேந்தர் சந்திராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அனைத்து மாணவர் களுக்கும் விடுதி வசதி, கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு, மாணவர் களே நடத்தும் உணவகம் என பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 27-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
5-வது நாளாக நேற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தின் நுழைவு வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். முதல் நுழைவு வாசல் வழியாக பல்கலைக்கழகத்தின் உள்ளே செல்ல முயன்ற ஊழியர்களை தடுத்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. எஸ்பிக்கள் தெய்வசிகாமணி, ரவிக்குமார், பைரவசாமி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலனில்லை. இதையடுத்து நுழைவு வாசலில் அமர்ந்திருந்த மாணவர்களை அப்புறப்படுத்த போலீஸார் முயன்றனர்.
அப்போது போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மாண வர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் சஜ்ஜத், சகல், ராகுல், மணிஷா, ரமேஷ் சந்திரா, பிரவீன், டேனிஷ் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சில மாணவர்களை குண்டுகட் டாக தூக்கிச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். பேராசிரியர் தஸ்தகிரி ரெட்டி மற்றும் 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாண வர் பிரதிநிதிகளில் சிலர் தலைமைச் செயலகம் சென்று தலைமைச் செயலரை நேரில் சந்தித்து பேசினர். பிரச்சினைகளுக்கு சுமுக முடிவு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.