Published : 01 Jun 2020 08:24 PM
Last Updated : 01 Jun 2020 08:24 PM

இரண்டாம் நாளாக ஆயிரத்தைக் கடந்த கரோனா: தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு தொற்று; சென்னையில் 972 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 972 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 14,798 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளது.

1,162 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 83.72 சதவீதத் தொற்று சென்னையில் (972) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 23,495-ல் சென்னையில் மட்டும் 15,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 66.26 சதவீதம் ஆகும்.

மொத்த எண்ணிக்கையில் 184 பேர் இறந்துள்ள நிலையில் இறப்பு சதவீதம் .78% என்கிற அளவில் உள்ளது. 13,170 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 56.05 சதவீதமாக உள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவச் சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்றும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களின் தினசரி எண்ணிக்கையை விட ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 23 ஆயிரம் என்கிற எண்ணிகையைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்துக்கு தமிழகம் வந்துள்ளது.

சென்னையும் 15 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருவது கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களை கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 50 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 1,05,707. இதில் மொத்த எண்ணிக்கை 1,628 பேர் (1.5%) .

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழக தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 184 பேரில் சென்னையில் மட்டுமே 138 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 75 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 15,570-ல் 138 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் .88% என்கிற எண்ணிக்கையில் உள்ளது.

இதனால் சென்னையின் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிராவில் 67,655 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 23,495 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 19,844 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத் கரோனா தொற்று எண்ணிக்கை 16,779 ஆக உள்ளது.

சென்னையைத் தவிர மீதியுள்ள 30 மாவட்டங்களில் 190 பேருக்குத் தொற்று உள்ளது. 6 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் மூன்று இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 43 அரசு ஆய்வகங்கள், 29 தனியார் ஆய்வகங்கள் என 72 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக சிகிச்சையில் உள்ளவர்கள் 10,138 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 5,03,339.

* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 4,80,246.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 11,377.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 10.21 சதவீதம் .

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 23,495.

* மொத்தம் (23,495) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 14,750 (62.77 %) / பெண்கள் 8732 (37.16%)/ மூன்றாம் பாலினத்தவர் 13 பேர் ( .05 %)

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,162.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 685 (58.95%) பேர். பெண்கள் 473 (40.70%) பேர். மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் (.34%)

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 413 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 13,170 பேர் (56.05 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 11 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 184 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 138 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 972 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 14,798 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை மட்டும் 15,000 என்ற தொற்று எண்ணிக்கையைக் கடந்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது. மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 67.12 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 32.88 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் 31 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 1,223, திருவள்ளூர் 981, கடலூர் 462, திருவண்ணாமலை 430, காஞ்சிபுரம் 416, அரியலூர் 370, திருநெல்வேலி 355, விழுப்புரம் 354, மதுரை 268, கள்ளக்குறிச்சி 246, தூத்துக்குடி 227, சேலம் 192, கோவை 151, பெரம்பலூர் 142, திண்டுக்கல் 145, விருதுநகர் 124 திருப்பூர் 114, தேனி 109. இவைதான் மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

முதன்முறையாக 31 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 6 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 50 பேருக்கும் இதுவரை தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் தொற்று எண்ணிக்கையுடன் வந்தவர்கள் எண்ணிக்கை 1,628.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1,322 (5.62%) பேர். இதில் ஆண் குழந்தைகள் 688 (52.04%) பேர். பெண் குழந்தைகள் 634 (48.96%) பேர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 19,961 பேர் (84.95%). இதில் ஆண்கள் 12, 690 (63.57%)பேர். பெண்கள் 7,258 பேர் (36.36%). மூன்றாம் பாலினத்தவர் 13 பேர் (.06%). 60 வயதுக்கு மேற்பட்டோர் 2,212 பேர் (9.41 %). இதில் ஆண்கள் 1,372 பேர் (62.02%). பெண்கள் 840 பேர் (37.98%).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x