சட்டவிரோதமாகக் கேரளாவுக்குக் கருங்கற்கள் கடத்தல்: அதிமுகவினர் மீது பொள்ளாச்சி திமுக புகார்

திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமையில் புகார் தர வந்த திமுகவினர்.
திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமையில் புகார் தர வந்த திமுகவினர்.
Updated on
2 min read

பொள்ளாச்சி அருகே உள்ள கல்குவாரியிலிருந்து ஆளுங்கட்சியினர் துணையுடன் கேரளத்திற்குக் கருங்கற்கள் கடத்தப்படுவதாகத் திமுகவினர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அஞ்சுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

திமுக ஆதிதிராவிட நலக்குழு மாநிலத் துணைச் செயலாளர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தலைமையிலான திமுகவினர் இது தொடர்பான புகார் மனு ஒன்றை கோவை ஆட்சியரிடம் இன்று அளித்தனர்.

புகார் குறித்து திப்பம்பட்டி ஆறுச்சாமி, நம்மிடம் கூறியதாவது:
“பொள்ளாச்சி வட்டம், ராமபட்டினம் பிர்க்கா மண்ணூர் ஊராட்சி, கோடங்கிபட்டி கிராமத்தில், கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் கல்குவாரி ஒன்றை நடத்திவருகிறார். அதில் தினசரி சுமார் 250 லோடு கற்கள் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அதற்கு கோடங்கிப்பட்டி கல்குவாரி உரிமச் சீட்டுதான் வாகனங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாகக் கோபாலபுரம் உரிமச்சீட்டு பயன்படுத்தி வருகிறார்கள். தவிர, அரசு அறிவித்துள்ள ஆழத்திற்கும் அதிகமாக இங்கே பாறை தோண்டப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக விவசாயிகள், விவசாய அமைப்புகள், சமூக நல ஆர்வலர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கச் சென்ற வருவாய் அலுவலர்களைக் கல்குவாரி நடத்துபவர்கள் மிரட்டியுள்ளனர். ஆளுங்கட்சி விஐபியின் ஆசியோடு இது நடப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் அதிகாரிகள் திரும்பி வந்துவிட்டனர். நடவடிக்கை எடுக்க முடியாமலும் தவித்துவருகின்றனர்.

இந்தக் கல் குவாரியால் 400 மீட்டர் தொலைவில் உள்ள பட்டியலின மக்களின் குடியிருப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டது. விவசாயம் அடியோடு பாழாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்குவாரிக்கு வந்து செல்லும் லாரிகளால் தார்ச் சாலைகள் பழுதாகி குண்டும் குழியுமாகிவிட்டன. பழுதான தார்ச்சாலையின் குழியில் விழுந்து கடந்த மாதம் ஒருவர் இறந்துவிட்டார். எனவே, இந்த விஷயத்தில் ஆட்சியர் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற புகார்களைத் திமுகவினர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜல்லிக்கற்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாகக் கூறி, திமுக கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் மே 26-ம் தேதி லாரிகளைச் சிறைப் பிடித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிகளை அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார்.

இதையடுத்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகம் அளித்த புகாரின்பேரில், கிணத்துக்கடவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வால்பாறையில் தங்கியிருந்த கீர்த்தி ஆனந்தைக் கைது செய்தனர். ஆழியாறு வனச் சோதனைச் சாவடி அருகே அவரை அழைத்து வந்தபோது, தென்றல் செல்வராஜ் தலைமையிலான திமுகவினர் போலீஸாரின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கீர்த்தி ஆனந்தையும் விடுவித்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து ஆழியாறு காவல் நிலையத்தில், கிணத்துக்கடவு போலீஸார் புகார் அளித்தனர். போலீஸாரைப் பணி செய்யவிடாமல் தடுத்து, விசாரணைக் கைதியை அழைத்துச் சென்றதாகத் தென்றல் செல்வராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவரையும், கீர்த்தி ஆனந்தையும் கைது செய்த போலீஸார், இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இப்போது அதே பாணியில் பொள்ளாச்சி திமுகவினர் புகார் செய்தது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாகிக் கொண்டிருக்கின்றன. அடுத்து எப்படியான கைது நடவடிக்கைகளோ என்று திமுக, அதிமுக வட்டாரத்தில் மட்டுமல்லாது போலீஸ் வட்டாரத்திலும் விவாதப் பேச்சாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in