

வைப்பாற்றில் மணல் திருட்டைத் தடுக்க வலியுறுத்தி விளாத்திகுளத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் பல்லாகுளத்தில் உரிய அனுமதியின்றி மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
தெற்கு மாவட்ட ஒன்றிய தலைவர் பார்த்தீபன், வடக்கு மாவட்ட ஒன்றிய தலைவர் கந்தசாமி, மாவட்ட மகளிரணியை சேர்ந்த லீலாவதி, மாவட்ட பொதுச்செயலாளர் சரவண கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
வட்டாட்சியர் வெளியே சென்றிருப்பதை அறிந்த அவர்கள், அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகம் பேர் ஒன்று கூட கூடாது என அறிவுறுத்தினர்.
பின்னர் வெளியே நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்ற வட்டாட்சியர் ராஜ்குமார் அலுவலகம் வந்தார். தொடர்ந்து அவர் பாரதிய ஜனதா கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.