

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூரில் வசிப்போருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்றாலும, சென்னை உட்பட வெளியூர்களில் இருந்து வருவோருக்கு கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
சென்னையில் இருந்து வந்த கணவன், மனைவி உட்பட 5 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்ற இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கரோனா வார்டில் 45 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 77 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்தமானில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் தூர்த்தூர், வள்ளவிளை பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் கப்பல் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு அங்கிருந்து சொந்த ஊர் திரும்பினர்.
அவர்கள் அனைவருக்கும் இன்று ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.