

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து இன்று தூத்துக்குடி வரும் கப்பலில் சுமார் 700 பயணிகள் வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி பல்வேறு கட்டுபாடுகள் மற்றும் தளர்வுகள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மண்டலத்தில் உள்ள தூத்துக்குடி உட்பட்ட 4 மாவட்டங்களுக்குள் 50 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.
டெல்லி, மகராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருவோருக்கு அதிகமாக கரோனா தொற்று காணப்படுகிறது.
இவர்களை கண்காணிக்க மாவட்டத்தில் 15 காவல் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் முதலில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதே போல், சென்னையில் இருந்து வருவோரும் பரிசோனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து நாளை மேற்கு வங்கத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சுமார் 2,500 வெளிமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 8,700 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் சொந்த ஊர் திரும்ப பதிவு செய்த 3 ஆயிரம் தொழிலாளர்கள் வரை பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளோம். இன்னும் சில நாட்களில் 1500 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இலங்கையில் உள்ள கொழும்புவில் இருந்து இன்று தூத்துக்குடி வரும் கப்பலில் சுமார் 700 பயணிகள் இருப்பார்கள். அவர்களை வரவேற்று, குடியேற்றத்துக்கான சோதனை மற்றும் தேவையான உணவு வழங்கி, அழைத்து செல்ல போக்குவரத்து ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 7-ம் தேதி மாலத்தீவில் இருந்து ஒரு கப்பல் தூத்துக்குடிக்கு வருகிறது. அதே போல், ஜூன் 21-ம் தேதி ஈரான் நாட்டில் இருந்து ஒரு கப்பல் வருவதாக தகவல் வந்துள்ளது, என்றார் அவர்.