

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் செப்டம்பர் 9,10 தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் கடந்தாண்டே தொடங்கி விட்டன. முதலீட்டாளர்கள் சந்திப்பு, கண்காட்சி, கருத்தரங்கம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழக அரசுக்கும் பல்வேறு நாடுகளில் இருந்து முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.
இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து 2500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். மாநாட்டுக்கு வரும் முதலீட்டாளர்கள் தங்குவதற்கான ஓட்டல்கள், அவர்களுக்கான போக்குவரத்து வசதிக்காக தனியான கைபேசி செயலி உருவாக்கப்பட்டு, அதில் அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். சென்னையிலுள்ள முக்கியமான 11 சாலைகள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன.
விமான நிலையத்தில் வெளிநாட்டு முனையம் மற்றும் பயன்படுத்தப்படாத உள்நாட்டு முனையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து கிண்டி கத்திப்பாரா சந்திப்பு வரையில் சாலையி்ன் பழுதடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாநாடு நடக்க உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நாளை முதல் ஆயத்தப்பணிகள் நடக்கவுள்ளன. வாகனங்களை நிறுத்துவதற்கும், வாகனங்கள் எளிதாக வந்து செல்வதற்கும் சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸார் பல்வேறு இடங்களை தேர்வு செய்து, போதுமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடந்து வரும் நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக செப்டம்பர் 7 முதல் 11ம் தேதி வரை பேரவை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.